» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை : எடப்பாடி கே. பழனிசாமி - ஓபிஎஸ் இரங்கல்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:13:04 PM (IST)

நீட் தேர்வு பயத்தால்  தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்தினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதியின் இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, 600-க்கு 562.28 மதிப்பெண் பெற்றிருந்தார்.  மருத்துவராக வேண்டும் என்ற கனவைத் தொடர்ந்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வினை எழுதியுள்ளார். 

தேர்வு எழுதிவிட்டு வந்ததும் தனது தாய் ஜெயலட்சுமியிடம் நீட் தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ள கனிமொழி நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக தனது அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ஓ.பன்னீர் செல்வம்,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், வெளியிட்ட அறிக்கையில் 'மாணவி உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆற்றொண்ணாத் துயரத்தையும் மன வேதனையையும் அளித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றே அனைத்துக் கட்சிகளும் குரல்கொடுத்து வரும் வேளையில் மாணவர்கள் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory