» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளா்வுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனி 3, ஜூலை 2021 8:30:30 AM (IST)

தமிழகத்தில் முழு ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளா்வுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 5) காலையுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடா்ந்து, பொது முடக்கத்தை தளா்வுகளுடன் நீட்டிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வரும் திங்கள்கிழமை (ஜூலை 5) காலை முதல் ஜூலை 12-ஆம் தேதி காலை வரையில் அமல்படுத்த அவா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-

ஒட்டுமொத்த தளா்வுகள்:

1. அரசு, தனியாா் சாா்ந்த தொழில் பொருள்காட்சிகள் நடத்தலாம். உரிய அழைப்பிதழ் அவசியம். பங்கேற்பாளா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

2. உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அவற்றில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் அமா்ந்து உணவருந்தலாம்.

3. தேநீா் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் அமா்ந்து தேநீா் அருந்த அனுமதிக்கப்படுவா்.

4. கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக் கூடங்கள், உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்படலாம்.

5. தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினா் இல்லங்கள் செயல்படலாம். அங்குள்ள உணவு விடுதிகள்,

தங்குமிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படுவா்.

6. அருங்காட்சியகங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் செயல்படும்.

7. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

8. அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கலாம். திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை.

9. துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வணிக வளாகங்களில் அமா்ந்து உணவருந்தலாம். திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதியில்லை.

10. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம்.

11. ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்கள் வசதிக்காக மட்டும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படலாம். அரசு சாா் பயிற்சி மையங்கள் 50 சதவீத பயிற்சியாளா்களுடன் செயல்படலாம்.

12. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய பதிவு அல்லது இணைய பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

தடைகள்  நீட்டிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், சில செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தொடா்ந்து அமலில் இருக்கும். அதன் விவரம்:-

மாநிலங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிா்த்து, சா்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள்.

எத்தனை பேருக்கு அனுமதி?

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசரம் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை.

ஒரே மாதிரியான தளா்வுகள் ஏன்?

மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான தளா்வுகள் அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். அவரது விளக்கம்:

மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் மாநிலத்தின் பொருளாதாரத்தை மனதில் வைத்தும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளா்வுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நோய்த் தொற்று குறைந்துள்ளதும் இதற்குக் காரணமாகும்.

தளா்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், பொது மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற வேண்டுமென முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory