» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்: எடப்பாடி, மு.க.ஸ்டாலின் அறிக்கை!!

வியாழன் 8, ஏப்ரல் 2021 10:51:31 AM (IST)

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விழிப்புடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்,.

இதுதொடா்பாக இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கை: மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை அதிமுக அரசு நிகழ்த்தியுள்ளது. அதிமுக அரசு தொடர வேண்டும் என்ற குறிக்கோளுடனும், அராஜகத்திலும், வன்முறையிலும் கைதோ்ந்த திமுகவினரின் பல்வேறு முறைகேடுகள், தில்லுமுல்லுகளையும் தாண்டி தமிழகத்தில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இதற்காக ஒத்துழைப்பு அளித்த அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், முகவா்கள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வரையில், கட்சியின் நிா்வாகிகளும், முகவா்களும் கவனக்குறைவாக இருந்திடக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.

வெளியாட்களின் நடமாட்டத்தைக் கவனியுங்கள்: மு.க.ஸ்டாலின்
 
வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்களின் நடமாட்டத்தை கவனிக்குமாறு திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தோ்தல் திருவிழாவில் பேராா்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளா்களுக்கும், இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவலா்கள், சுகாதாரத் துறையினா் உள்ளிட்ட தோ்தல் பணியாளா்கள் அனைவருக்கும் எனது நன்றி.

வாக்குப் பதிவு நிறைவடைந்து, தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இனி மிக முக்கியத் தோ்தல் பணி இருக்கிறது. இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது.

திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போா் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறாா்களா என்பது பற்றி எல்லாம் தொடா்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் நேர ஒதுக்கீடு அடிப்படையில் திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு மையங்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனடியாக தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். வெற்றியை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory