» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
ஞாயிறு 21, பிப்ரவரி 2021 11:42:10 AM (IST)

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்களுக்கு 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 2019-ம் ஆண்டுக்கு, வைகைச்செல்வன் (இலக்கியம்), டாக்டர் வெ.சத்தியநாராயணன் (மருத்துவ நூல் ஆசிரியர்), ஜாலீ ஆபிரஹாம் (மெல்லிசை), ராமராஜன் (நடிகர்) யோகி பாபு (நகைச்சுவை நடிகர்), கலைப்புலி எஸ்.தாணு (திரைப்பட தயாரிப்பாளர்) உள்ளிட்டோருக்கும்,
2020-ம் ஆண்டுக்கு, சிவகார்த்திகேயன் (நடிகர்), ஐஸ்வர்யா ராஜேஷ் (நடிகை), மதுமிதா (நகைச்சுவை நடிகை), டி.இமான் (இசையமைப்பாளர்), ஐசரி கணேஷ் (திரைப்பட தயாரிப்பாளர்), ஜாக்குவார் தங்கம் (திரைப்பட சண்டை பயிற்சியாளர்), கவுதம் வாசுதேவ் மேனன் (இயக்குனர்), ரவி மரியா (நடிகர்-இயக்குனர்), தாமரை செந்தூர்பாண்டி (கதை ஆசிரியர்) என மொத்தம் 128 பேருக்கு கலைமாமணி விருதினை வழங்கினார். கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விருதுடன் தலா 5 பவுன் (40 கிராம்) எடை உள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதினை, (2019-ம் ஆண்டு) பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (திரைப்படம்), பாடகி பி.சுசீலா (இசை), நாட்டிய கலைஞர் அம்பிகா காமேஷ்வர் (நாட்டியம்) ஆகியோருக்கும், 2020-ம் ஆண்டுக்கு பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (திரைப்படம்), ஜமுனா ராணி (இசை), பார்வதி ரவி கண்டசாலா (நாட்டியம்) ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த கலை மன்றத்துக்கான விருதினை பொள்ளாச்சி தமிழிசை சங்கத்துக்கும், 2020-ம் ஆண்டுக்கான சிறந்த கலை மன்றத்துக்கான விருதினை மதுரை தமிழிசை சங்கத்துக்கும், சிறந்த நாடகக் குழுவுக்கான விருதினை திருவண்ணாமலை சபரி நாடகக் குழுவுக்கும் எடப்பாடி பழனிசாமி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
கடந்த ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்ற பழம்பெரும் கலைஞர்கள் வி.மூர்த்தி (நாடக நடிகர்), இசையரசன் (இசைநாடகம்), எஸ்.ஆர்.கல்யாணி (கரகாட்டம்), கே.ஆர். அம்பிகா (ராஜ நடிகை), பசிசத்யா (திரைப்பட நடிகை), பி.எஸ்.கோமதி (வில்லிசை), எஸ்.என்.பார்வதி (நாடக நடிகை), டி.லட்சுமி (கரகாட்டம்), பட்டுக்கோட்டை சுப்ரமணியன் (இயற்றமிழ்) ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
2019-ம் ஆண்டுக்கான பாரதி விருது சீனிவிஸ்வநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது எஸ்.ராஜேஸ்வரி, பாலசரஸ்வதி விருது அலர்மேல்வள்ளி ஆகியோருக்கும், 2020-ம் ஆண்டுக்கான பாரதி விருது சுகி சிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராம், பாலசரஸ்வதி விருது சந்திரா தண்டயுதபாணி ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கலைமாமணி விருது பெற்ற பழம்பெரும் 9 மூத்த கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான பொற்கிழியும் சிறந்த 2 கலை நிறுவனங்களுக்கு கேடயமும், சிறப்புற செயல்படும் ஒரு நாடகக் கலைக்குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையர் வி.கலையரசி, தமிழ்நாடு இயல்-இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் வீ.தங்கவேலு (ஓய்வு) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைகளின் வயிறு எரியும் நெருப்பு ஆபத்தானது: மத்திய அரசுக்கு கமல் கண்டனம்
வியாழன் 25, பிப்ரவரி 2021 9:01:18 PM (IST)

ராகுல் காந்தியிடமே நாராயணசாமி பொய் சொன்னார் : புதுச்சேரியில் மோடி பேச்சு!!
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:14:25 PM (IST)

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:09:40 PM (IST)

தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து : மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:01:49 PM (IST)

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாா் குறித்து விசாரிக்க குழு : தமிழக அரசு உத்தரவு
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:31:55 AM (IST)

பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன் : சசிகலா பேச்சு
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:55:18 AM (IST)
