» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்

வியாழன் 21, ஜனவரி 2021 11:08:29 AM (IST)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5-ந் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பின்னர், ஓரிரு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையையும் கொண்டாடினார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து மியாட் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே இருந்தது.

இதனால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். அதற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு அவருடைய உடல்நிலை குறித்த எம்.ஜி.எம். மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் கூறியதாவது:-

கடந்த 19-ந் தேதி இரவு அமைச்சர் ஆர்.காமராஜ் வென்டிலேட்டர் உதவியுடன் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை அனுமதித்து சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், கரோனாவால் நுரையீரல் செயல்பாடுகளில் மாற்றம் அதிகமாக இருக்கிறது. அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு, சிகிச்சை நடைமுறைகள் சரியான அளவில் நடைபெற்றன. அவருடைய உடல்நிலை இப்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு போன்ற அனைத்து உறுப்பு செயல்பாடுகளும் நிலையாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எக்மோ கருவி பொருத்த தேவையில்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory