» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா: அகண்ட தீபம் ஏற்றி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்

வெள்ளி 16, அக்டோபர் 2020 3:58:51 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா. ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் அகண்ட தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில், நவராத்திரி விழாவை ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்கள் இன்று பகல் 12.00 மணிக்கு அகண்ட தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார். சித்தர் பீடத்தின் நுழைவு வாயில் மற்றும் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நவராத்திரி கொலு ஆலய பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கொலுவில் பெருமாள், முருகன், கிருஷ்ணன் போன்ற தெய்வச்சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது போன்றே இந்த ஆண்டும் நவராத்திரி விழா விமரிசையாக துவங்கியது. இன்று அதிகாலை 2.00 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து கருவறை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது. காலை 9.15 மணிக்கு சித்தர்பீடம் வந்த ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு மேளதாளம் முழங்க பாதபூஜையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு அருட்திரு அடிகளார் அவர்கள் அருட்கூடத்திலிருந்து ஈர உடையுடன் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். ஒரு கன்னிப் பெண்ணிடம் அகண்ட தீபத்தை கையில் கொடுத்தார். அக்கன்னிப்பெண் அகண்ட தீபத்தை ஏந்தியபடியும், மூன்று சிறுமிகள் அம்மன் அலங்காரத்திலும், உடன் ஒரு சிறுவனுமாக நிற்க வைத்து அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையான நாட்டு காய்கறிகளைக் கொண்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டது. அருள்திரு அடிகளார் அகண்ட தீபத்தை சித்தர்பீடத்தை வலம் வரும்படி கூறினார். சித்தர்பீடத்திலுள்ள அனைத்து சன்னதிகளையும் பிரதட்சணமாக வலம் வந்தது. 

பிரகாரத்தின் முன்பாக தாமரை சக்கரம் அமைத்து அதனை தொடர்ந்து பிரதட்சணமாக தொடங்கி முக்கோணம், அறுங்கோணம், செவ்வகம், எண்கோணம், வட்டம் போன்ற சக்கரங்கள் அமைத்து அவற்றின் மேல் அதே வடிவத்தில் அமர்ந்திருந்த கன்னியர்கள் சிறுவர், சிறுமியர் நடுத்தர இளம் மற்றும் மூத்த சுமங்கலிகள் கையில் வெவ்வேறு விளக்குகள் ஏற்றி வரவேற்க அகண்ட தீபம் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து; 12.40 மணிக்கு கருவறையிலுள்ள தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் அமைக்கப்பட்டிருந்த படம் எடுத்த  நாகம் சுற்றி காத்து நிற்பது போல் அமைக்கப்பட்டிருந்த தனி பீடத்தில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.

மதியம் 12.45 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு அடிகளார்  அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து காத்திருந்த பக்தர்களும் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு தீப ஒளியை வழிபட்டனர். புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பகல் 1.00 மணிக்கு அமாவாசை வேள்வியை அருள்திரு அடிகளார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து இலட்ச்சார்ச்சனை பகல் 2 மணியளவில் துவங்கியது. இலட்ச்சார்ச்சனைக்கு பெயர் பதிவு செய்தவர்களின் நட்சத்திரம் மற்றும் பெயர் சொல்லி சங்கல்பம் செய்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்திட இலட்ச்சார்ச்சனை தொடங்கியது. அப்பொழுது கருவறை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது.நவராத்திரி விழா இன்று தொடங்கி அக்டோபர் 26ஆம் தேதி வரை வெவ்வேறு காப்புகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் நடைபெறும். இயக்கத் துணைத் தலைவர் சக்தி கோ.ப. செந்தில்குமார்  மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில்; செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சாலிகிராமம் மற்றும் எண்ணூர் சக்தி பீடங்களும் மற்றும் மன்றங்களும் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

Rajeswari .mOct 16, 2020 - 08:26:50 PM | Posted IP 108.1*****

OMGURUVADI SARANAM OMTHIRUVADI SARANAM Omsakthi Ammavey Saranam Amma 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory