» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: நீதிபதிகள் ஆவேசம்

வெள்ளி 16, அக்டோபர் 2020 9:06:53 AM (IST)

"அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம்” என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த சூரியபிரகாசம், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அப்படி இருக்கும்நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. தமிழகத்தில் நெல் விளையும் பகுதிகளில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்களை அரசு நிறுவி உள்ளது.  அந்தந்த பகுதிகளில் நெல் மூடைகளை, கொள்முதல் நிலையங்களில் விற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழக டெல்டா பகுதிகளில்தான் அதிக அளவில் நெல் விளைச்சல் உள்ளது. 

அங்குள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளை விற்பதற்கு பல நாட்கள் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் நெல் மூடைகள் முழுவதும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய தொகை கிடைக்காததால் மேலும் அவர்கள் துயரம் அடைகின்றனர். எனவே இந்த நிலையை தவிர்க்க, தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், நெல் கொள்முதல் செய்ய தாமதமாகும்பட்சத்தில் விவசாயிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விவசாயிகள் இரவு-பகல் பாராமல் நிலத்தில் பாடுபட்டு உணவுப்பொருட்களை விளைவித்து, பிறருக்கு உணவூட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் விளைபொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாத காரணத்தால் சாலைகளில் இரவு-பகலாக காத்துக்கிடக்கின்றனர். விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, அரசு விவசாயிகள் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஒரு நெல் மூடையை கொள்முதல் செய்வதற்கு ரூ.40-ஐ லஞ்சமாக அதிகாரிகள் பெறுவதாக, செய்திகளில் பார்க்க முடிகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் சம்பளத்துக்கும் மேலாக, லஞ்சம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிடம் அதை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றன. விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீணடிக்கப்பட்டால்கூட, அதற்கான தொகையை கொள்முதல் நிலைய அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும். 

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. எனவே விவசாயிகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கையை அரசு எடுத்ததாக தெரியவில்லை. இதுகுறித்து மாற்று ஏற்பாடுகளை அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூடைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று நாளை (அதாவது இன்று) சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிப கழக இயக்குனரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

உண்மOct 16, 2020 - 11:15:08 AM | Posted IP 162.1*****

அது நிறைய அரசியல்வாதிகளுக்கு பொருந்தும்

TamilOct 16, 2020 - 11:09:38 AM | Posted IP 173.2*****

oh???????????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory