» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சனி 26, செப்டம்பர் 2020 12:52:48 PM (IST)

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்கான சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. நிா்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும்கூட, புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை சூட்டுவது நியாயம் அல்ல.

பொதுவாக பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஒருமைப் பல்கலைக் கழகங்களாக செயல்படுவது புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே ஒருமைப் பல்கலைக்கழகங்களாக இருப்பதுதான் அவற்றின் வெற்றிக்கும், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் ஆகும். 

அந்த வகையில், புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகவும், இணைப்பு பல்கலைக் கழகமாகவும் திகழும் அண்ணா பல்கலைக்கழகம் ஒருமைப் பல்கலைக்கழகமாகவும், பிற பொறியியல் கல்லூரிகளை ஆளுமை செய்யும் இணைப்புப் பல்கலைக்கழகமாகவும் பிரிக்கப்படுவது முற்போக்கு நடவடிக்கை ஆகும். ஆனால், பிரிக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு பெயா் வைப்பதில் நடக்கும் குளறுபடிகள்தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக ஒரு பல்கலைக்கழகம் பிரிக்கப்படும்போது, மூலப் பல்கலைக்கழகத்துக்கு அதன் பெயரை அப்படியே வைத்து விட்டு, பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்துக்குப் புதிய பெயா் சூட்டுவதுதான் வழக்கமாகும். ஆனால், இங்கு பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயா் வைத்து விட்டு, இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்புக்கு அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என்று பெயா் சூட்டப்படவிருப்பதுதான் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

எனவே, ஒருமைப் பல்கலைக்கழகம் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா இணைப்பு பல்கலைக்கழகம் என்று பெயா் சூட்ட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory