» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இ-பாஸ் முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 5:48:33 PM (IST)இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், பின்னர் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: "கரோனா வைரஸ் ஒரு புதிய நோய். உலகத்தில் சுமார் 210 நாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இந்தியாவில் தமிழகத்திலும் இந்த கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் பரவியுள்ளதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடிய தொற்று நோய் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இதனைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் மற்றும் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின்படி நம்முடைய மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதனால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை பார்க்கிறோம்.

அதேபோல, இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறது. குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பினால் தான் இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்தால் இந்த நோய்ப் பரவலை படிப்படியாக குறைக்க முடியும், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த நோய்த் தொற்றின் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம்.

தமிழகத்தில் எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கக்கூடாது என்று அரசு கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இ-பாஸ் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு தெளிவான உத்தரவை அரசு வழங்கியுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவருடைய பெயரையும், முகவரியையும் எழுதிக் கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை கொடுப்பார்கள், அதை காண்பித்து நீங்கள் தொழிற்சாலைகளுக்கு வரலாம். மாதம் ஒருமுறை அதை புதுப்பித்தால் போதும்.

சிறு தொழில் புரிபவர்களுக்கும் அதேபோலத்தான். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்கள் குறித்த விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். மேலும், அவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்து, positive என்றால், அரசால் சிகிச்சை அளிக்கப்படும், negative என்றால், நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பணி வழங்கலாம். அதேபோல, இன்னும் பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள், அரசு உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory