» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் உட்பட 35 பொறியாளர்களுக்கு கரோனா தொற்று

சனி 1, ஆகஸ்ட் 2020 11:21:53 AM (IST)

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உள்பட 35 பொறியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக உயர்ந்தது. நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,013 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கரோனா பாதிப்பு 99 ஆயிரத்து 794 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்று கரோனாவுக்கு சென்னையைச் சேர்ந்த 21 பேர் உள்பட 97 பேர் பலி ஆனார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் 2,113 ஆகவும், தமிழ்நாட்டில் 3,935 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. சென்னையில் கரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகரில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும், மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை நடத்தி வருகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

கெரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளை தனிமைப்படுத்தி நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலும் மற்றும் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் என சுமார் 700 பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தவிர ஏராளமான ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் மண்டல வாரியாக கரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

என்னதான் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே 150 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 350 சுகாதார பணியாளர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். வருவாய்துறை, மக்கள் தொடர்புத் துறையின் உயர் அதிகாரிகளும் நோய்த் தொற்றுக்கு ஆளானார்கள். அவர்களில் சுமார் 300 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், மாநகராட்சியில் பொறியாளர்களாக பணியாற்றும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களில் தலைமை பொறியாளர் நந்தகுமாரும் ஒருவர் ஆவார். அவரையும் கரோனா விட்டு வைக்கவில்லை. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற பொறியாளர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நோய்த் தொற்றுக்கு ஆளான போதிலும், கரோனா ஒழிப்பு பணியை மாநகராட்சி தொய்வின்றி மேற்கொண்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory