» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தந்தை மகன் கொலை : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசைச் சேர்ந்த 4 பேருக்கு சிபிசிஐடி வலை

வெள்ளி 3, ஜூலை 2020 5:07:00 PM (IST)

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசைச் சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கரோனா ஊரடங்கு நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததாக கூறி கடந்த 19ம்தேதி சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது போலீசார் ஒத்துழைப்பு இல்லை என்றும், ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மிரட்டல் தொனியில் செயல்பட்டது குறித்தும், போலீஸ்காரர் மகாராஜா அவதூறு பேசியது குறித்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்தார். 

இதையடுத்து போலீஸ்காரர் மகாராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவரும் மாற்றப்பட்டனர். மாஜிஸ்திரேட் விசாரணையின் போது போலீசார் லத்தியால் இரவு முழுவதும் வியாபாரிகள் இருவரையும் தாக்கியது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த பெண் ஏட்டு ரேவதி அளித்த சாட்சியம் உள்ளிட்டவை தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். எனினும் சாட்சியங்கள் அழியக் கூடும் என்பதால் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை இடைக்காலமாக சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டனர். 

இதையடுத்து வழக்கு ஆவணங்கள் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது வழக்குபதிந்தனர். இதில் முத்துராஜ் தவிர்த்து மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள், தந்தை, மகன் இறந்த நாள் அன்றே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீசாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்டால் இந்த வழக்கில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory