» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா காலத்தில் தற்கொலைக்கு தூண்டும் அரசு அதிகாரிகள் ? : முதல்வர் மவுனம் கலைப்பாரா

புதன் 1, ஜூலை 2020 10:56:40 AM (IST)

இ‍-பாஸ் சரியாக கிடைக்காததால் தமிழகத்தில் தினந்தோறும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசின் பதில் என்ன என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் தளர்வுகள் வழங்கப்பட்டு மாவட்ட எல்லைக்குள் மட்டுமே சென்று வரலாம் என்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டுமென்றால் கட்டாயம் இ‍-பாஸ் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பவர்களுக்கு சரியாக இ‍-பாஸ் கிடைப்பதில்லை என்றும் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து விண்ணப்பிப்பவர்களுக்கே உடனடியாக இ‍-பாஸ் கிடைத்து விடுவதாக பாஸ் கிடைக்காதவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இது குறித்து ஆன்லைனில் விண்ணப்பித்து இ‍-பாஸ் கிடைக்காத ஒருவர் தெரிவித்ததாவது, திருமணம், இறப்பு போன்ற அவசர தேவைக்கு உடனடியாக செல்ல வேண்டியவர்கள் இடைத்தரகர்களிடம் செல்கிறார்கள் . அவர்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்பவர்களை பிடித்து உடனே இ‍-பாஸ் பெற்று விடுகிறார்கள். இதற்கு சுமார் குறைந்தது ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வாங்கி கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தான் இ‍-பாஸ் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், அரசியல் பலம் வாய்ந்தவர்கள், பணம் அளிப்பவர்களுக்கே இ‍-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க முறையாக ஆன்லைனில் இ‍-பாஸ் கிடைக்க விண்ணப்பித்தவர்கள் அது கிடைக்காததால் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி ரோஜா கர்ப்பமான நிலையில் மகப்பேறுக்காக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த ஓரிரு நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் வாய்ப்பு உள்ளதாக தொலைபேசியில் ரோஜா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனால் தனது கணவரை சென்னைக்கு வருமாறு ரோஜா அழைத்ததாக தெரிகிறது.தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு செல்ல இ-பாஸ் பதிவு செய்து பலமுறை அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.இந்நிலையில் மனமுடைந்த விக்னேஸ்வரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது ஊரடங்கு அறிவித்ததிலிருந்தே பலர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து வீட்டில் இருப்பது, வேலையிழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றால் அவர்கள் தற்காெலை செய்யும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்களை வேலையிலிருந்து நீக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. 

அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 7 முதல் 8 தடவை விண்ணப்பித்தும் அவர்களுக்கு இ‍-பாஸ் கிடைப்பதில்லை. இவையெல்லாம் தமிழக முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளதா ? அல்லது அவருக்கு அரசு உயரதிகாரிகள் யாரும் எடுத்து கூறவில்லையா என்பதும் தொடர்ந்து இது போன்று நடைபெறும் தற்கொலை சம்பவங்களுக்கு அரசின் பதில் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

எனவே தமிழகஅரசு இ‍-பாஸ் விஷயத்தில் பாரபட்சம் காட்டாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனே இ‍-பாஸ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். மேலும் பணம் வாங்கி கொண்டு பாஸ் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory