» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு

சனி 23, மே 2020 7:57:59 AM (IST)

ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டையும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் தமிழக அரசின் பராமரிப்புக்கு மாற்ற அவசர சட்டத்தை பிறப்பித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அவர் வசித்து வந்த வீட்டை பொதுத் தேவைக்காக எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். வேதா நிலையம், ஜெயலலிதா மற்றும் அவரது தாயாரும் நடிகையுமான சந்தியாவினால் 1967-ம் ஆண்டு ஜூலையில் வாங்கப்பட்டது. அப்போது அதன் விலை ரூ.1.32 லட்சமாக இருந்தது. 2016-ம் ஆண்டில் அதன் மதிப்பு ரூ.43.97 கோடியாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அவரது சாதனைகள் மற்றும் தியாகங்களை மக்கள் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்காக அந்த அரசு நினைவிடம் திறந்து விடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் இல்லத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதே ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டது. அங்குள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட அறிவிப்பாணை 2019-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பு கடந்த 6-ந் தேதி வெளியிடப்பட்டது.

வேதா நிலைய கட்டிடங்களும், அங்குள்ள மேஜை, நாற்காலி, புத்தகங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே ஆர்ஜிதப் பணிகள் முடியும்வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசின் பராமரிப்புக்கு மாற்றிக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு ஏதுவாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசு தனது வசம் எடுத்துக்கொண்டு, அதை நினைவிடமாக மாற்றுவதற்கான நீண்டகால செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை நிறுவும்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்-அமைச்சர் இருப்பார். துணை முதல்-அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் அதன் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார். வேதா நிலையத்தை நன்றாக பராமரிக்கவும், அங்குள்ள அசையும் சொத்துகளை பாதுகாக்கவும் இந்த அறக்கட்டளை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 23, 2020 - 11:53:59 AM | Posted IP 108.1*****

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை னு சொன்ன கதையாத்தான் இருக்கு. இங்கே நாட்டுல எவ்வளவு பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு இப்போ தான் ரொம்ப முக்கியமா.

ஆம்மே 23, 2020 - 10:54:00 AM | Posted IP 162.1*****

சீக்கிரம் மாற்றி விடுங்க , இல்லாட்டில் மன்னார்குடி திருட்டு மாபியா சசிகலா குரூப் வந்து ஆக்கிரமித்து விடுவார்கள் ... ஜெயலலிதா சொத்தையே குடும்பத்திற்கு விற்றுவிடுவார்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory