» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கை ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 4:55:01 PM (IST)

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என அமமுக பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனோ பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாமிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழுவீச்சில் கரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். 

ஆனால் அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன. இத்தகைய மரணங்களில் இருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது. 

மேலும் சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு, வீடாக சென்று கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். 

தொடக்கத்தில் இருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கரோனா யுத்தத்தில் போர் வீரர்களைப் போல மக்களைக் காப்பாற்றி வரும் அவர்களைக் கூடுதல் கவனம் செலுத்தி காத்திட வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்திடக்கூடாது.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். 10 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள்.  அரசு அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இவற்றை எல்லாம் நடைமுறைபடுத்துவதற்கு அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மApr 8, 2020 - 10:22:48 AM | Posted IP 162.1*****

ஆட்சியை கலைக்க போறோம் சொல்றாங்க அதுவும் நடக்கல , உங்களை யாரு நம்ப போறாங்க ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory