» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலையே மோடிக்கும் ஏற்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 4:07:13 PM (IST)

ஹிட்லர், முசோலினி போன்று மோடி செயல்படுகிறார். அந்த சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலையே மோடிக்கும் ஏற்படும்.என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பில் ஈரோடு சூரம்பட்டி 4 முனைச் சந்திப்புச் சாலையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: மோடி அரசு நாட்டில் பல குழப்பங்களை செய்து வருகிறது. இஸ்லாமிய மக்களுக்கு தொந்தரவு தர வேண்டும், அவர்களை ஒதுக்க வேண்டும் என்ற முறையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். 

ஒற்றுமையாக இருக்கும் மக்களை மதத்தால் பிரிக்க வேண்டும் என மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசைக் கண்டு அஞ்சி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடியாது எனக்கூறிவிட்டனர். பிரிட்டிஷ்காரர்களையே விரட்டி அடித்தவர்கள் இந்திய மக்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றால், மத்திய ஆட்சியாளர்களை தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்.

ஆயிரக்கணக்கான தலைவர்களும், தொண்டர்களும் நாட்டு மக்கள் அமைதியாக, நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான், உயிர் தியாகம் செய்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர். ஆனால் இப்போது தனி மனிதனின் சுதந்திரம் பறிபோய்கொண்டிருக்கிறது. மத்திய அரசு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, வணிக நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. தொழில், வியாபாரம், விவசாயம் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

இதனால் மக்கள் இப்போது நலிந்து போய் இருக்கின்றனர். கடுமையான நெருக்கடியில் இருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையாக சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் இப்போது இரண்டு மடங்கு விலை அதிகரித்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மோடி அரசுக்கு சிறிதும் இல்லை. ஹிட்லர், முசோலினி போன்று மோடி செயல்படுகிறார். அந்த சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலையே மோடிக்கும் ஏற்படும்.

மக்களுக்காக ஆட்சிசெய்ய வேண்டும் தவிர, சுய விருப்பு, வெறுப்புக்காக ஆட்சி செய்யக்கூடாது. இந்த நிலை தொடருமானால் தமிழ்நாட்டிற்குள் மோடி வர முடியாத நிலை உருவாகும். இளைஞர்கள் உணர்ச்சி மிக்கவர்கள், தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசு தொடர்ந்து மக்களை பிரித்தாள முயற்சி செய்தால் இளைஞர்கள், மாணவர்கள் திரண்டெழுந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள். நாடு மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். 

நாட்டிற்கு விடுதலை வாங்கித்தந்தவர்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினருக்கு மற்றவர்களைக் காட்டிலும் பொறுப்புகள், கடமைகள் அதிகம் இருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்தைச் செய்யவும் காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பி.என்.நல்லசாமி, பொதுச்செயலாளர் கே.எம். பாலசுப்பிரமணியன், மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவி சித்ரா, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், சிறுபான்மைப்பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா உள்ளிடோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory