» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் க. பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்னை: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 3:22:23 PM (IST)

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என சபாநாயகர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,  இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அதிமுக நிலைப்பாடு என்றும் சரியானது தான். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தி வந்தார். 

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமையே இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை குடியுரிமையை இழந்து இந்திய குடியுரிமை பெறும்போது இலங்கையில் அவர்களுக்கான உரிமை இல்லாமல் போய்விடும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தமிழக அரசின் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளார். எங்களது நிலைப்பாட்டில் தவறில்லை என கூறினார்.

இதையடுத்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் பேசியது குறித்து உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவந்தார் திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு.  அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம்தான் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறி உள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சராலேயே அது மறுக்கப்பட்டுவிட்டது. சட்டபேரவையில் தவறான தகவலை அளித்து அவையை தவறாக வழி நடத்தியுள்ளார். 

அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று கேட்கவில்லை, ஆனால் இதுபோன்று பேசியதால் அவர்களுக்குள் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என சபாநாயகர் தனபால் தீர்ப்பளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக பொருளாளர் துரைமுருகன் குடியுரிமை பிரச்சினை என்பது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை தமிழக அமைச்சர் முடியும் என்று சொல்கிறார். இது அவை உரிமை மீறல். இதை சபாநாயகரிடம் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சபாநாயகர் பக்கத்தில் போய் சொன்னாலும், மாஃபா பாண்டியராஜன் பேசியது சரிதான் என சொல்கிறார் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory