» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

ஞாயிறு 19, ஜனவரி 2020 10:14:36 PM (IST)சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. சென்னை - கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான முகாமில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை புகட்டி, மாநில அளவிலான முகாமை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் காலை 7:00 முதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை வழங்கி வருகிறது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும், 1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் மூலமாகவும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், தன்னார்வலா்கள் என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் சுமார் 2 லட்சம் போ் ஈடுபடுபட்டுள்ளனர்.

முதலில் ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இன்றையதினம், தமிழகத்தில் போலியோ நோயால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் முழுவதுமாக இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினாலும்,  போலியோ நோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும், ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கி கொண்டு இருக்கின்றோம்.  குறித்த காலத்திலே வழங்கப்படுகின்ற காரணத்தினாலே, இன்றைக்கு தமிழகத்திலே 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் இன்றைக்கு தமிழ்நாடு போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்காங்கே இருக்கின்ற மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு, பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதியேற்போம்.

போலியோ நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தை கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல ஏற்பாட்டை இன்றைக்கு செய்திருக்கின்றது. இந்த நல்ல ஏற்பாட்டை பெற்றோர்கள் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்க வேண்டும் என்று அன்போடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சுகாதாரத் துறைக்கும், இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒளிபரப்புகின்ற ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும், போலியோ சொட்டுமருந்து நிகழ்ச்சியிலே பங்கு பெற்று தங்களுடைய குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக வந்திருக்கின்ற அத்தனை தாய்மார்களுக்கும், இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்ற அனைவருக்கும்  உளமார என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டில் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory