» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுக்கோட்டை அருகே கார் விபத்தில் அமைச்சர் பிஏ உட்பட 2பேர் பலி

ஞாயிறு 12, ஜனவரி 2020 5:32:49 PM (IST)

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பிஏ உள்பட 2 பேர் இறந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ் (எ) வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் இரவு சென்னைக்கு புறப்பட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு காரில் அழைத்துச்சென்று திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு, தனது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் இலுப்பூர் இடையபட்டியை சேர்ந்த பாலமுத்து மகன் செல்வம் (38) ஓட்டினார்.நள்ளிரவு 12 மணி அளவில் மணப்பாறை-புதுக்கோட்டை சாலையில் அன்னவாசல் அருகே கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே வந்த போது, நிலைத்தடுமாறிய கார் எதிர்பாராதவிதமாக ேராட்டோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். செல்வம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் இறந்தார். அன்னவாசல் போலீசார் வெங்கடேசனின் உடலை இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த வெங்கடேசனுக்கு 2 ஆண்டுக்கு முன் பானுபிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனின் தாய் இந்திரா நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, சிபிஐ தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ததன் மூலம் ₹639 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் குடோன் உரிமையாளர் மாதவராவ் டைரியில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடந்தது.

அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு ₹89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக அமைச்சர்கள் 2 பிஏக்களை வைத்துக்கொள்ளலாம். ஒரு பிஏ அரசு சார்பில் நியமிக்கப்படுவார். இன்னொருவரை அமைச்சரே நியமித்துக்கொள்ளலாம்.அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட உதவியாளர் சரவணன். இவரிடம் குட்கா வழக்கில் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. அதேபோல் மற்றொரு உதவியாளர் வெங்கடேசனிடமும் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் இறந்த வெங்கடேசன், அமைச்சருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் குட்கா விவகாரம் மற்றும் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரங்களில் என்ன நடந்தது என்று வெங்கடேசனுக்கு முழுமையாக தெரியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, குவாரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். இந்த விவகாரங்களில் எல்லாம் வெங்கடேசன் முக்கிய சாட்சியாக இருந்தவர். தற்போது குட்கா வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் வெங்கடேசன் விபத்தில் இறந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory