» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர்- அதிமுக நாளிதழ் விமர்சனம்!!

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:06:13 PM (IST)

ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என நடிகர் ரஜினியை அதிமுக நாளேடு விமர்சித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி முதல்வராவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவர் முதல்வர் ஆனது அதிசயம், அதில் தொடர்வது அதிசயம் என்று கமல்-60 விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நாளையும் ஒரு அதிசயம் நடக்கும்என்று பேசியிருந்தார். சில நாட்களுக்கு முன் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என்று குறிப்பிட்ட ரஜினிக்கு எடப்பாடியே, ரஜினியெல்லாம் ஒரு தலைவரா? அவர் கேட்கிறார்னு நீங்களும் கேக்காதீங்க என்று சேலத்தில் காட்டமாக பதில் கொடுத்தார். 

இந்நிலையில் மீண்டும் எடப்பாடியை ரஜினி சீண்டியபிறகு இன்று (நவம்பர் 19) வெளியான அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளிதழ் நமது அம்மா "ரஜினி ரீல் தலைவர், எடப்பாடி ரியல் தலைவர்" என்று குறிப்பிட்டு பதில் கட்டுரை வெளியாகியுள்ளது. குத்தீட்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், "முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலி அல்ல என்பதை கமல்ஹாசனுக்கு ரஜினி சுட்டிக் காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே தோன்றுகிறது.

கூடவே, தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்றும் சொல்லியிருக்கிறார் ரஜினி. உண்மைதான் கண்டக்ட்ராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித் தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

அப்படித்தான் எடப்பாடியும் படிப்படியாய் உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவராக முடியும், முதல்வராக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்” என்று ரஜினிக்கு பதில் அளித்திருக்கும் நமது அம்மா கட்டுரை அடுத்த பத்திகளில் சூடான சொற்களை வீசியிருக்கிறது.

"ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு இது. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும்.நீங்கள் சுட்டிக்காட்டுகிற அதிசயம் இதுதான்” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory