» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணக்கார மாநில கட்சிகள் பட்டியலில் அதிமுகவை முந்தியது திமுக: சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்வு

வியாழன் 10, அக்டோபர் 2019 11:00:36 AM (IST)

பணக்கார மாநில கட்சிகளின் பட்டியலில் அ.தி.மு.க.வை தி.மு.க. முந்தியிருக்கிறது. தேசிய அளவில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சொத்து விவரம், வரவு-செலவு கணக்கு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவேண்டும்.அதன் அடிப்படையில் கிடைக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து உள்ள அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை ஆண்டுதோறும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்களின் சங்கம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை அந்த சங்கம் வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- 2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320.06 கோடியாக இருந்தது. கடந்த 2016-17-ம் ஆண்டு 39 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,267.81 கோடியாக இருந்தது. ரூ.583.28 கோடி சொத்து மதிப்பினை பெற்று தேசிய அளவில் பணக்கார கட்சி பட்டியலில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு ரூ.571.12 கோடியாக இருந்தது. அதன்படி 2017-18-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு 2.13 சதவீதம் உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வை முந்தியது தி.மு.க.

இதற்கு அடுத்தபடியாக பணக்கார மாநில கட்சி பட்டியலில் தி.மு.க. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அ.தி.மு.க.வும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு தி.மு.க.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு தி.மு.க.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது. தற்போது அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, தி.மு.க. முந்தியிருக்கிறது.

பா.ம.க.-தே.மு.தி.க.

பா.ம.க. உள்ளிட்ட சில மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு எதிர்மறையாக குறைந்திருக்கிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் பா.ம.க.வின் சொத்து மதிப்பு ரூ.2.63 கோடியாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு ரூ.2.59 கோடியாக குறைந்திருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு சொத்து மதிப்பு ரூ.67 லட்சமாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு 87 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 28.5 சதவீத உயர்வு ஆகும். இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

குமார்Oct 10, 2019 - 01:24:34 PM | Posted IP 162.1*****

ஆட்சியில் இல்லாத போதே இப்படியா?

இவன்Oct 10, 2019 - 11:29:34 AM | Posted IP 108.1*****

படிக்காத அரசியல்வாதிகள் சம்பாதித்த பணம் எல்லாம் வியர்வை சிந்தி உழைத்த பணம் அல்ல , எல்லாம் , அரசும் , மக்களிடம் ஆட்டை போட்ட பணம்தான் .... திருட்டு திராவிட காட்சிகள் நாட்டை நாசமாகி கொண்டிருக்கிறது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory