» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் விண்ணப்பத்தில் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? வைகோ கேள்வி

வியாழன் 13, ஜூன் 2019 12:51:32 PM (IST)

நீட் விண்ணப்பத்தில் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ,  நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி சாதாரண எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் கனவைத் தகர்த்து எறிந்தது பாஜக அரசு. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பாஜக அரசு கருதவில்லை; குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது.

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்து மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது. அதன்படி, விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்த மாணவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் எந்தெந்தச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டு இருக்கின்றது. அதில் 5 ஆவது வரிசை எண்ணில், பிளஸ் 2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்கப்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்டால் எங்கே போவார்கள்? அதைக் கேட்க வேண்டிய தேவை என்ன? அதேபோல வரிசை எண் 14 இல் பெற்றோரின் சான்றிதழ்களின் நகல் இணைக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றது. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதார் போன்றவை இணைக்கப்பட்டால் போதுமானது.

இதுபோன்ற சான்றுகளுடன் ஜூன் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. பிளஸ் 2 தேர்வு மைய நுழைவுச் சீட்டு, பெற்றோர் படிப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் கேட்பதன் மூலம் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் வடிகட்டி வாய்ப்பை மறுக்கும் சதியோ இவை என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப் பெற வேண்டும்", என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory