» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னால் மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டிய நிலை ஒருபோதும் வராது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

புதன் 24, ஏப்ரல் 2019 11:24:51 AM (IST)

மு.க.ஸ்டாலின் ஒருபோதும் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது என்றும், அவர் வீறுநடை போடுவதற்கு உதவியாகவே எனது செயல்பாடுகள் இருக்கும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறிய கருத்துகள் டாக்டர் ராமதாசுக்கு சரியாக சென்றடையவில்லை எனக் கருதுகிறேன்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு சாலைகள் போடுவதை தடை செய்யவில்லை. சேலம்- சென்னை பசுமை வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள எவ்வித நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதே கோர்ட்டு தீர்ப்பின் நிலைப்பாடாகும். நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு முறையாக அறிவிக்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட ‘பாரத் மாலா பரியோஜனா’ திட்டத்தில் சென்னை-மதுரை நெடுஞ்சாலை திட்டம் தான் சேர்க்கப்பட்டதே தவிர, சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் சேர்க்கப்படவில்லை.

மேலும், ‘ஏ’ பிரிவு வகையை சேர்ந்த இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும். இதற்கு பிரதமர் தலைமையிலான பொருளாதாரக் குழு, இந்திய தலைமை மற்றும் கணக்காயர், சுற்றுச் சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முன்அனுமதி அவசியம் பெற வேண்டும். ஆனால் இந்த அமைப்புகள் எதனிடமும் முன் அனுமதி பெறாமல் சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை நிறைவேற்றுவதற்கான ஆயத்த பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டன.

சரியான இழப்பீடு கிடைக் கும் எனில் நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க தயாராகவே இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள், சாலைகள், ரெயில்வே பாதைகள், விமான நிலையங்கள் இவைகளெல்லாம் இந்த வகையில் தான் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பா.ம.க. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த போது, திண்டிவனம், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு ரெயில்வே பாதை அமைக்க திட்டம் கொண்டு வந்தனர். அந்த ரெயில் பாதை விவசாய நிலங்கள் வழியாகத் தான் போனது என்பதை எவரும் மறந்திட இயலாது. அப்போது விவசாய நிலங்கள் மீது காட்டாத அக்கறையை இப்போது டாக்டர் ராமதாஸ் காட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது.

டாக்டர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டரில் என்னுடைய கருத்திற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலை குனிய வேண்டும் என்று கூறியிருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் வந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருபோதும் தலை குனிய வேண்டிய அவசியம் வராது. தமிழக அரசியலில் அவர் எப்போதும் வீறுநடை போடுவதற்கு உதவியாகவே என்னுடைய செயல்பாடு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிApr 24, 2019 - 04:04:52 PM | Posted IP 172.6*****

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க கொடுக்கப்பட்ட தொகை எட்டு கோடிகள். ஆனால் இப்ப அது இரண்டு கோடிகள் - எவ்ளோ அடிச்சு இருக்கார் நம்ம பாலு - பாத்தீங்களா

meaveApr 24, 2019 - 03:35:55 PM | Posted IP 141.1*****

what we want put what is the use? what they think that will happen.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory