» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலக நன்மைக்காக மேல்மருவத்தூரில் சித்திரை பௌர்ணமி வேள்வி : பங்காரு அடிகளார் நடத்துகிறார்

செவ்வாய் 16, ஏப்ரல் 2019 11:50:14 AM (IST)மேல்மருவத்தூரில் உலக நன்மைக்காக சித்திரை பௌர்ணமியன்று 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூசையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நடத்துகிறார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பௌர்ணமியன்று மாலை 5.00 மணி அளவில் மழைவளம் வேண்டியும். இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் நல்ல குணங்களையும் செயல்களையும் கொண்டு மன அமைதியுடன் வாழவும், உலக அமைதி;க்காகவும் வேண்டி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச, விளக்கு வேள்வி பூசை நடத்துகிறார். வேள்வியில் பங்கேற்க பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

வேள்வி பூசைக்கான குருபூசை கடந்த 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு குருபூசை, விநாயகர் பூசை, சக்தி பூசையுடன் துவங்கியது. பெண்களும், ஆண்களுமாக சுமார் 1000 செவ்வாடை வேள்வித் தொண்டர்கள் யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேள்வி சாலையில் 1008 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முக்கோணம், சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம், வட்டம் ஆகிய வடிவங்களை உள்ளடங்கிய யாககுண்டங்களும், நாக வடிவம் மற்றும் சூல வடிவங்களில் யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

சித்தர்பீடத்தின் முன்புறமாக அண்டங்களை காக்கும் முகமாக அன்னை அருளிய "அண்டவெளி சக்கரம்” என்ற பிரம்மாண்ட சக்கரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சித்தர்பீடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் யாக குண்டங்களையும், சக்கரங்களையும் அவ்வப்போது ஆன்மிககுரு அடிகளார் பார்வையிட்டு வேள்வி பொறுப்பாளர்களிடம் ஆங்காங்கே திருத்தங்களை செய்ய உத்தரவிடுகிறார்.

சித்திரை பௌர்ணமி விழா 18ஆம் தேதி வியாழக்கிழமை விடியற்காலை 3.30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. காலை 4.00 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன. காலை 9.00 மணி அளவில் சித்தர்பீடம் வரும் ஆன்மிக குரு அடிகளாருக்கு விழா பொறுப்பேற்ற பக்தர்கள் பாதபூசை செய்து சிறப்பு வரவேற்பளிக்கிறார்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் காலை 10.30 மணிக்கு அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் ஆன்மிககுரு அடிகளார் கலச, விளக்கு, வேள்வி பூசையை துவக்கி வைக்கிறார். 

வேள்வியை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக இயக்கத்தின் பல்வேறு குழுவினரும், இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையிலும், துணைத் தலைவர்கள் கோ.ப. செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோரது வழிகாட்டுதலுடனும் இரவு பகலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மன்றங்களும், சக்திபீடங்களும் விழா பொறுப்பேற்று தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் தலைமையிலும், சக்திபீடங்களின் இணைச் செயலாளர் இராஜேந்திரன் ஏற்பாட்டில் வேள்வி தொண்டர்கள் யாக சாலையில் சக்கரம் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கும் பணியை சிறப்புற செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory