» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களுக்கு சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன் 20, மார்ச் 2019 5:11:46 PM (IST)

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி  இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை குற்றச்சாட்டுப்பதிவுக்காக சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்துக் கூட விசாரிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும், 4 மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory