» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றினார் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திங்கள் 21, ஜனவரி 2019 7:56:29 PM (IST)மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தைப்பூச ஜோதியை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். 

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து, இருமுடி ஏந்தி வந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிடேகம் செய்தனர். நேற்றுடன் இருமுடிவிழா நிறைவு பெற்றது. சுமார் 47 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் 50 இலட்சம் பக்தர்களுக்கு மேல் உணவருந்தினர்.

தைப்பூசவிழா நேற்று (20ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மங்கள இசையுடன் துவங்கியது. காலை 8.30 மணிக்கு சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு அருள்திரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர். மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்கு, வேள்வி பூசையைதுவக்கி வைத்தார். இரவு 8மணிக்கு திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார். தைப்பூசம் ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம், செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. மாலை 4 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி மற்றும் வயலின் கலைஞர் அபிஜித் நாயர் குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் தைப்பூச ஜோதி ஏற்றும் விழா மங்கள இசையுடன் துவங்கியது. 

ஜோதியை ஏற்ற பயன்படும் குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் இல்லத்தின் முன் நடைபெற்றது. பின்னர் கோ பூசை நடைபெற்றது. பின் குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க, ஐந்துபெண்கள் அந்த ஜோதியை வேப்பிலை சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர். மாலை 4.45 மணிக்கு ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் இல்லத்திலிருந்து துவங்கிய குரு ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் ப.அன்பழகன் மற்றும் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும், தொடர்ந்து தேவர் ஆட்டம், நடனமாடும் குதிரை, ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள், கிராமியக்கலை, பொய்க்கால் குதிரை, நைய்யாண்டி,மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்த நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடர, கேரள செண்டை வாத்தியம் முழங்க, மகளிர் சீர்வரிசைகளுடன் குரு ஜோதி ஊர்வலம் ஜோதி திடலை அடைந்தது.ஜோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப் பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக ஜோதி மேடையின் மத்தியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஜோதி கலசத்தின் முன்புறம் குரு ஜோதி நிறுவப்பட்டது.

மாலை 6 மணி அளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வருகை தந்த பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஜோதி மேடையையும், ஜோதி தளத்தையும் ஆன்மிககுரு பார்வையிட்டதும், ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. ஆதிபராசக்தி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் நடனநிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு முறைகளால் தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்புக் கொண்ட கலசத்திற்கு பெண்கள் திருஷ்டிகள் எடுத்தனர்.மாலை 6.15 மணிக்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார் திருக்கரங்களால் தைப்பூச ஜோதி ஏற்றப்பட்டது. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் மேலும் முக்கிய பிரமுகர்களான ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன், ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் மற்றும் இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வாண வேடிக்கைகள் பக்தர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், இயக்கத்தின் ஈரோடு மாவட்டத்தின் மன்றங்களும், சக்திபீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.

இவ்விழாவில் பல மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பொதிகை- தமிழ், பாரதி- இந்தி, சந்தனா– கன்னடம், சப்தகிரி–தெலுங்கு, யாதகிரி–தெலுங்கு தொலைகாட்சிகளின் மூலம் உலகெங்கும் உள்ள பலகோடி ப‌க்தர்கள் கண்டு களித்தனர்.


மக்கள் கருத்து

ஓம் சக்தி Ln கோ.பாபுJan 22, 2019 - 11:23:06 AM | Posted IP 141.1*****

குருவே தெய்வம் தெய்வமே குரு உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் ஓம் சக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory