» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஞ்ச பூதங்களையும் வணங்கினால் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும் : பங்காரு அடிகளார் அருளுரை

திங்கள் 5, நவம்பர் 2018 7:47:33 PM (IST)

மாதா, பிதா, குரு தெய்வம் போன்று பஞ்ச பூதங்களையும் வணங்கினால் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் தீபாவளி ஆசி உரையில் தெரிவித்துள்ளார்.

ஓம்சக்தி!

ஆதிபராசக்தி!

தீபாவளி வாழ்த்துக்கள்!

மாதா, பிதா, குரு தெய்வம் போன்று பஞ்ச பூதங்களையும் வணங்கினால் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.


நிம்மதிக்கு மெய்ஞானம்தான் தீர்வு


தீபாவளி என்றால் ஆதிகாலத்தில் வீட்டில் தீபத்தை ஏற்றி வழிபட்டு அந்த ஒளியில் வீட்டிலுள்ள இருளை நீக்கி அதன் மூலம் நிம்மதியும், அமைதியும் கிடைக்கப் பெற்றோம். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தின் மின்சார விளக்கில் எந்த அளவிற்கு ஒளி கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பார்வை குறைபாடுகளும் ஏற்படத்தான் செய்கிறது. ஆதிகாலத்தில் மண் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி இட்டு அதன் மூலம் ஒளி ஏற்றும் பொழுது நல்ல பார்வை இருந்தது எந்த வித பிரச்சனைகளும் ஏற்படவில்லை.

மெய் ஞானத்தை விட்டு விஞ்ஞானத்திற்கு செல்லும் போது பல பிரச்சனைகளும் பல தொல்லைகளும் ஏற்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் தொல்லைகள் ஒன்றல்ல, இரண்டல்ல விலங்குகளால் தொல்லை, பூமியால் தொல்லை, இயற்கையால் தொல்லை என ஏராளமான தொல்லைகள் ஏற்படுகின்றது. விஞ்ஞானத்தின் தேவை ஒரு அளவிற்குதான். இன்று அருளுக்கும், பொருளுக்கும் விஞ்ஞானம் இருக்கிறது. ஆனால் அமைதிக்கும், நிம்மதிக்கும், மெய்ஞானம்தான் தீர்வு. 

ஆணவம் வரும் போது அழிவு வருகிறது

ஒரே மாவுதான், ஒரே இனிப்புதான், அது பல பலகாரங்களாக மாறுகிறது. அது போல மனிதன் பல குணங்களை கொண்டவனாகிறான். எந்த ஒரு நிலை ஏற்பட்டாலும் கடல் அலை குறைவதில்லை அது போல மனிதன் நினைக்கும் நினைப்பும் குறைவதில்லை. கடல் அலைகள் அதிகமாகும் போது சீற்றம் ஏற்படுகிறது, பூகம்பம் உண்டாகிறது, அழிவு உண்டாகிறது அது போல மனித மனதில் ஆணவம் வரும் போது அழிவு வருகிறது. ஆன்மா என்ற ஒன்றுதான் ஆணவத்தை அடக்கும். மனிதனுக்கு ஆறறிவு இருந்தால் கூட அது அமைதியான ஆறாக இருந்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் உபயோகப்படுவது போல  செயல்பட வேண்டும். 

தீபாவளியை உற்றார் உறவினருக்கு புத்தாடை கொடுத்து அரவணைத்து கொண்டாட வேண்டும். அதை விடுத்து நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று பாகுபாட்டுடன் செயல்படக்கூடாது. குடும்பம் தான் கோயில், கோயில் தான் குடும்பம். ஆதி காலத்தில் பெரியோர்  சொல் கேட்டு நடப்பார்கள். பெரியோர்கள் என்றால் நல்ல உள்ளம், நல்ல எண்ணம், நல்ல செயல் உள்ளவனே பெரியவன். ஆரம்ப காலத்தில் பஞ்சாங்கம் பார்த்து இன்று மழை பெய்யும், நாளை இது நடக்கும் என்று சொல்வார்கள் இன்று வானிலையை ஆராய்ச்சிக்குட்படுத்தி கணிக்கும் போது வானிலை மாறுகிறது, பருவ நிலை மாறுகிறது, மனநிலையும் மாறுகிறது.

உள்ளமும் தெளிவாக இருக்க வேண்டும், பேச்சும் தெளிவாக இருக்க வேண்டும், பார்வையும் தெளிவாக இருக்க வேண்டும், காதுகளும் தெளிவாக இருக்க வேண்டும். மௌனம் என்பது வாயை மூடிவிட்டால் மௌனம் கிடையாது. காதிலே கேட்டதை வெளியே சொல்லக்கூடாது, பார்வையால் பார்த்ததை வெளியில் சொல்லக்கூடாது. பேச்சிலே தேவையற்றதை சொல்லக்கூடாது. நல்லது கெட்டது தெரிந்தால் கூட இப்போது இருக்கும் காலத்தில் எதை சொல்லலாம் எதை சொல்லக்கூடாது என்று தெரியவில்லை. எனவே அமைதிதான் நிம்மதி என்று இருக்க வேண்டும்.
 

மன நோயை உண்டாக்கும் செல்போன்

செல்போனால் கண், காது போன்ற அவயங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது மன நோயை உண்டாக்குகிறது. சிந்திக்கும் திறன் குறைகிறது. நாகரீகம் அநாகரீகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அநாகரீகம் நாகரீகமாக இருந்தால் நன்றாக இருக்கும், இந்த ஆண்டு மழை உண்டு. குடிநீர் தட்டுப்பாடு கிடையாது. ஆனால்; மழை பெய்யும் போது ஏதோ பெய்கிறது அதனை ஏன் நாம் வணங்க வேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். ஆரம்ப காலத்தில் அறுவடை செய்யும் போது அறுவடை செய்த பொருளை பூஜையில் வைத்து வணங்குவான். இப்பொழுது அதெல்லாம் செய்வது கிடையாது அதே போல பஞ்ச பூதங்கள் தான் நம்மை காப்பாற்றுகின்றது, அந்த பஞ்ச பூதத்தை வணங்க வேண்டும்.

நண்பர்களும் பகைவனாகிறான், பகைவனும் நண்பனாகிறான் நண்பரிடம் கூட எதை பேசுவது எதை பேசக் கூடாது என தெரியவேண்டும். போன காலம் பொற்காலம் வருங்காலம் பொன்னான காலம் அல்ல புண்ணான காலம், அமைதி கிடையாது. நாவிற்கு உணவு ருசிகளை பகுத்தறியும் சக்தி உண்டு இது இனிப்பு, இது புளிப்பு என்று. அந்த உணவு உள்ளே சென்றவுடன் என்ன ஆயிற்று என்று தெரியாது. நேற்று என்ன என்று நினைக்க வேண்டும், இன்று என்ன என்று நினைக்க வேண்டும் நாளையை பற்றி நினைக்க கூடாது. நேற்றும் மறந்து இன்றும் மறந்தால் நாளை உன்னையே மறக்கவேண்டியிருக்கும். களை எடுக்கும் போது களை எடுக்க வேண்டும் அறுவடை செய்யும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும் போது களை எடுக்கக்கூடாது. 

ஆதிபராசக்தி என்பவள் காந்தம் போன்றவள் பக்தன் என்பவன் ஊசி போன்றவன் எப்படி ஊசியானது காந்தத்தில் ஒட்டிக் கொள்கிறதோ அதே போல பக்தனானவன் ஆதிபராசக்தியிடம் ஐக்கியமாகின்றான். ஆனால் அந்த ஊசி துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும். காரணம் துருபிடித்தால் காந்தத்தில் ஒட்டாது. அது போல பக்தன் தூய்மையானவனாக இருந்தால் ஆதிபராசக்தி அவனை ஏற்றுக் கொள்கிறாள்.  நினைத்ததை கொடுத்தால் தெய்வம் என்கிறான், கொடுக்காவிட்டால் கல் என்கிறான். கல் என்று நினைத்தால் தெய்வம் கல்லாகவே மாறிவிடும். தெய்வத்திற்கு தெரியும் எப்பொழுது யாருக்கு என்ன தர வேண்டும் என்பது.

தாய் தந்தையரை வணங்கி வாழ வேண்டும்

இப்பொழுது வாழும் வாழ்க்கை இனிப்பாக இருக்கிறது என்று ஏமாந்துவிடக்கூடாது. இனிப்பு அதிகமானால் சர்க்கரை நோய் தான் வரும். நீ காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்தால் உனக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவனும் உன்னுடன் சேர்ந்து நடக்கிறான். இதற்கெல்லாம் காரணம் உடலுக்கு தகுந்த உழைப்பு இல்லாதது தான். அந்த காலத்தில் மிதிவண்டியிலும், நடைபயணமாகவும் சென்றார்கள். இன்று ஆரோக்கியத்திற்காக நடக்க வேண்டியுள்ளது. பிறரை பார்த்து பொறாமை கொள்ளாமல் தனக்கு எட்டாத நிலைக்கு ஆசைப்படாமல், தனக்கு எட்டிய நிலையில் மன நிம்மதியோடு தம் தாய் தந்தையரையும், இயற்கையும் அனைவரும் வழபாடு செய்து வணங்கி வாழ வேண்டும் என்பது தான் இந்த அம்மாவின் ஆசை.

வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும், செவ்வாடைத் தொண்டர்களுக்கும் தீபாவளி நன்னாளில் மன நிம்மதியும், அமைதியும் பெற்றிட ஆசி! 


மக்கள் கருத்து

அருண்Nov 7, 2018 - 02:46:24 PM | Posted IP 192.8*****

குடும்பம் தான் கோயில், கோயில் தான் குடும்பம். ஆதி காலத்தில் பெரியோர் சொல் கேட்டு நடப்பார்கள். பெரியோர்கள் என்றால் நல்ல உள்ளம், நல்ல எண்ணம், நல்ல செயல் உள்ளவனே பெரியவன்.. அருமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory