» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை போராட்டம் வெல்லட்டும்: சீமான் வாழ்த்து

திங்கள் 15, அக்டோபர் 2018 5:25:00 PM (IST)

இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது. ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் கொடுஞ்சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்களது விடுதலைக்காகத் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் நடைப்பயண போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க் குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன். 

சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற 107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது. அதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இணைந்திருக்கிற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory