» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல்: தேர்தல் கமிஷனில், சசிகலா தரப்பு மனு

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:49:33 AM (IST)

பார்வையாளரை நியமித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார்.

அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் எழுத்துப்பூர்வ வாதங்களை மனுவாக தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று சசிகலா தரப்பு சார்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் எழுத்துப்பூர்வ ஆவணங்களை மனுவாக அளித்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், சசிகலாவின் பதிலை நேற்று (நேற்றுமுன்தினம்) ‘இ.மெயில்’ மூலம் அனுப்பினோம். இன்று (நேற்று) நேரடியாக கொடுத்து இருக்கிறோம். அந்த மனுவில், தேர்தல் கமிஷன் ஒரு பார்வையாளரை நியமித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பிற உட்கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கேட்டு இருக்கிறோம்.

சசிகலா பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலேயே நாங்கள் பதில் கொடுத்திருக்கிறோம். அவர் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார் என்று எதிலும் கிடையாது. இப்போதும் அவர் உறுப்பினர் தான். டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார் என்ற வாதமும் ஏற்புடையது அல்ல. அப்படி எந்த ஆவணமும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்படவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனிக்கட்சி அல்ல. இடைக்காலமாக தேர்தலை சந்திப்பதற்கு ஒரு பெயர் வேண்டும், சின்னம் வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. இதனை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

இறுதி உத்தரவுக்கு ஏற்றாற்போல் முடிவு எடுக்கப்படும். அ.தி.மு.க.வை வழிநடத்தும் உரிமையை தான் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு கொடுப்பதாக தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறதே தவிர, கட்சியை கொடுத்ததாக கூறவில்லை. சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டோம் என்று சொல்லவில்லை. பொதுச்செயலாளர் சரியா?, தவறா? என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் உரிமையியல் கோர்ட்டுக்கு உள்ளது என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory