» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமுருகன் காந்தி கைது.. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள்: சீமான் அறிக்கை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:44:13 PM (IST)

பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மக்களாட்சித் தத்துவத்தையே முற்றுமுழுதாகக் குலைக்கிற இதுபோன்ற ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் யாவும் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நாசகாரத் திட்டங்களை மண்ணில் புகுத்துவதும், அதற்கெதிராக கருத்தியல் பரப்புரையையும், களப்பணியும் செய்யும் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோக வழக்கு என அடக்குமுறைகளை ஏவிவிடுவதுமான நடவடிக்கைகள் யாவும் அரசப்பயங்கரவாதத்தின் உச்சகட்டமாகும். 

தம்பி திருமுருகன் காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் தேசத் துரோக வழக்கு என்பது சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். ஆகவே, அவர் மீது பொய்யாக தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கினைத் திரும்பப் பெற்று தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory