» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ரஜினிகாந்த் பின்புலத்தில் யார்? கனிமொழி விமர்சனம்!!

புதன் 18, ஜூலை 2018 12:13:50 PM (IST)

தமிழக மக்கள் விரும்பாத சென்னை-சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை ஆதரிக்கும் ரஜினிகாந்த், யாருடைய பின்புலத்தில் செயல்படுகிறார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கனிமொழி எம்பி விமர்சித்தார்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதும் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுக்கும் வேலைக்குத் தான் காவல் துறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக-அதிமுகவினர் தாய், பிள்ளை உறவில்தான் உள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுவது, நேர்மையானதாக இருந்தால், முறைகேடுகள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதையே திமுக வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கமல், ரஜினி என்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே முக்கியம். ரஜினிகாந்த், தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்துக்கு எதிராகப் பேசினார். இப்போது, சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை வரவேற்கிறார். அவர் யாருடைய பின்புலத்தில் செயல்படுகிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.

மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சேராமல் தடுக்கப்படுவதாக பாஜக தலைவர் தமிழிசை கூறுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகிய இரு திட்டங்கள் விரைவாக சென்றடைந்ததாலேயே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும்போது, அவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், தெலுங்குதேசம் கட்சியினர் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு திமுக ஆதரவளிக்கும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory