» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் நீதிமய்யம் உயர்நிலைக்குழு கலைப்பு: புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிப்பு

வியாழன் 12, ஜூலை 2018 4:50:27 PM (IST)

மக்கள் நீதிமய்யத்தின் உயர்நிலைக்குழுவை திடீரென கலைத்த நடிகர் கமல்ஹாசன். புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அன்று மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் இயக்கத்தை ஆரம்பித்தார். கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சிநேகன், வழக்கறிஞர் ராஜசேகர், ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா உள்ளிட்டோரை நியமித்தார்.
 
கட்சி ஆரம்பித்து அறிக்கைவிட்டு சுற்றுப்பயணமும் செய்தார் கமல்ஹாசன். அவரது அறிவிப்புகள் பல அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை, ஜாதி ஒழிய சான்றிதழ்களை கிழித்து போடவேண்டும் போன்ற அவரது சில அறிவிப்புகள் விமர்சிக்கப்பட்டன. ஆனாலும் கமல்ஹாசன் தனது இயக்கத்தை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் முனைப்பாக இருந்தார்.

கடந்தவாரம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு கட்சிக்கொடியை கமல் ஏற்றிவைத்தார். பின்னர் பழைய உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை முறைப்படி அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன், பொதுச்செயலாளராக அருணாசலம், துணைத் தலைவராக ஞானசம்பந்தன், பொருளாளராக சுகா ஆகியோரை நியமிப்பதாக அறிவித்த கமல்ஹாசன் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார்கள். இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள்’ என அறிவித்த கமல்ஹாசன் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக செயல்பட்ட பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, மௌரியா உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்கள் என அறிவித்தார்.
 
பின்னர் கட்சிக் கொடியையும் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன் திரண்ட தொண்டர்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் தனது பேச்சின் இடையே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory