» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்: பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திங்கள் 11, ஜூன் 2018 5:12:44 PM (IST)

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விவாத நிகழ்ச்சியை நடத்தலாமா என்ற பொறுப்புணர்வுடன் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 8-ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள், அரங்கில் அமர்ந்திருந்த ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "புதிய தலைமுறை தொலைக்காட்சியினர், தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா? என்ற தலைப்பில் வட்டமேசை விவாதம் ஒன்றை, கோவை மாநகர், பீளமேடு, ஆவாரம்பாளையத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கம் ஒன்றில், உள்ளரங்க கூட்டமாக 8.6.2018 அன்று மாலை நடத்த விண்ணப்பிக்க விவரம் கேட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை 4.6.2018 அன்று அணுகிய போது, காவல் துறையினர், மத ரீதியாக பதற்றம் நிறைந்த கோவை மாநகரில் சர்ச்சைக்குரிய இம்மாதிரியான கூட்டங்கள் நடத்துவது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது தொலைக்காட்சி நிறுவனத்தினர், நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாகவும், உள்ளரங்க கூட்டமென்பதால், கோவை மாநகரில், முக்கிய இடங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து விளம்பரம் செய்து கொள்ள மட்டுமாவது அனுமதி வழங்குமாறு கோரியதற்கு, காவல் துறையினர் மறுத்துள்ளனர். பின்னர், அத்தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், அதன் நிருபர் சுரேஷ்குமார் மீண்டும் அதே கோரிக்கையுடன் காவல் துறையினரை அணுகிய போது, காவல் துறையினர் உள்ளரங்க நிகழ்ச்சியாக இருந்தாலும், காவல் துறை தடையின்மைச் சான்று வழங்கினால், அது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சி ஆகிவிடும் என்று எடுத்துரைத்துள்ளனர். 

அதற்கு, சுரேஷ்குமார், தங்கள் நிறுவனம் அந்நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே தொடர்ந்து விளம்பரம் செய்து வருவதை சுட்டிக்காட்டி, வாய்மொழியாக அனுமதி கோரிய போது, காவல் துறையினர் அதற்கு வாய்ப்பில்லை என அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். இருப்பினும், 5.6.2018 அன்று, சுரேஷ்குமார், வட்ட மேசை விவாத நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி கடிதம் ஒன்றை பீளமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட நிலைய எழுத்தர், உயர் அதிகாரிகளிடம் கேட்டு பதில் சொல்வதாக அவரிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், போலீஸாரின் அனுமதியின்றி, 8.6.2018 அன்று, மாலை அந்த தொலைக்காட்சி சார்பில், அதே தனியார் கல்லூரி கலையரங்கில், வட்டமேசை விவாதம் நடந்துள்ளது. இவ்விவாதத்தில், மேட்டூர் அதிமுக எம்எல்ஏ செம்மலை, திமுக மாநில அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா முன்னாள எம்பி ஞானதேசிகன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, திரைப்பட இயக்குநர் அமீர், செ.கு.தமிழரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், விவாத நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுமார் 800 பேர் அரங்கத்தில் கூடியிருந்தனர். போலீஸார் அனுமதி வழங்காதபோதும், பல கட்சி மற்றும் அமைப்புகள் சார்ந்த தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்ற காரணத்தால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி, அன்று மாலை 5.55 மணிக்கு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் எவ்வித பிரச்சினையுமின்றி நடந்து கொண்டிருந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, பாபர் மசூதி இடிப்பு மற்றும் விவாத தலைப்பிற்கு தொடர்பில்லாத சங்கதிகளைப் பற்றி குறிப்பிட்ட போது, கூட்டத்தில் சற்று சலசலப்பு எழுந்துள்ளது. பின்னர், திரைப்பட இயக்குநர் அமீர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசிய போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் கோஷமிட்டுள்ளனர். அப்போது மேடையிலிருந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர், அவர்களை சமாதானம் செய்தும், கூச்சலும், குழப்பமும் தொடர்ந்து இருந்து வந்ததால், அந்நிகழ்ச்சி இரவு 8.05 மணிக்கு முடிக்கப்பட்டது.

உள்ளரங்க கூட்டமாக இருந்த போதிலும், பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி, தலைவர்களை பாதுகாப்புடன் அரங்கத்தைவிட்டு அனுப்பியும், மாநகரத்தில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து, கலையரங்கத்தின் பொறுப்பாளர் சுந்தரராஜன் 9.6.2018 அன்று, பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திரைப்பட இயக்குநர் அமீர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், கலையரங்கின் மேலாளர் ஆனந்தகுமார் என்பவர் அன்றே பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தொலைக்காட்சியின் நிருபர் சுரேஷ்குமார், நிகழ்ச்சிக்கு அரங்கத்தை பதிவு செய்த போது, வட்டமேசை விவாத நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்துவதாக தெரிவித்துவிட்டு, விவாதத்தில் எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பிரமுகர்களை அழைத்து, அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடு விதிக்காமலும், நிகழ்ச்சியை பார்க்க வருபவர்களை பதிவு செய்யவும், அவர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமல், நிகழ்ச்சியின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசப்பட்டால் பிரச்சினை வரும் என்று தெரிந்தும், சிலரை பேச அனுமதித்து பிரச்சினை ஏற்படுத்தியதற்காக நிருபர் திரு.சுரேஷ்குமார் மீதும், தொலைக்காட்சி நிறுவனம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக, காவல் துறையினர் குற்ற எண். 964/2018, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153 (ஏ), 505 மற்றும் தமிழ்நாடு பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் இழப்பு தடுப்பு சட்ட பிரிவு 3(1)-ன்படி வழக்கு பதிவு செய்துள்ளனர். 10.6.2018 அன்று பீளமேடு காவல் நிலையத்தில் தொலைக்காட்சியின் நிறுவனத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல், தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜஸ்வர்யாவிடம் வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் அமீர் தெரிவித்த கருத்துகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள், காவல்துறையினரால் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் உட்பட மேலும் சில காட்சிகள் வெட்டப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு விவாத மேடை காட்சியானது, ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வெட்டுக்கள் ஏதும் இல்லாத, ஆட்சேபகரமாக அமீர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு, போலீஸார் வசம் உள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம், காவல் துறையின் முன் அனுமதியின்றி, தவறான தகவல்களை கல்லூரி நிர்வாகத்திற்கு அளித்து கலையரங்கை பதிவு செய்து, முறையான முன்னேற்பாடுகள் செய்யாமலும், கட்டுப்பாடுகள் விதிக்காமலும் நிகழ்ச்சியை நடத்தியதால், அந்நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதாக, அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அந்நிகழ்ச்சியின் போது ஆட்சேபகரமாக பேசிய அமீர் மீதும், கல்லூரி நிர்வாகம் அளித்த புகார்களின் பேரில் மட்டுமே, காவல் துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விவாத மேடை நிகழ்ச்சியில் தூத்துக்குடி நிகழ்வுகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் முழுமையான அமைதி நிலவி வரும் சூழ்நிலையில், இதுபோன்ற விவாதங்கள் தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கை பாதிக்கக்கூடும். தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்குகள் நிலுவையிலுள்ள தருணத்திலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இத்தருணத்திலும், இதுபோன்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்நிகழ்ச்சி நடைபெற்ற போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டதன் காரணமாகவே, பிரச்சினை ஏற்பட்டபோது, அவர்கள் உடனடியாக தலையிட்டு, மோதல் ஏதும் நடக்காமல் தடுத்து, அனைவரையும் பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டு, அவ்வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென சில பத்திரிகை சங்கங்களும், சில அரசியல் கட்சி தலைவர்களும் கோரியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால், விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு பேச்சுரிமைக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எப்போதும் மதிப்பும் முன்னுரிமையும் அளித்து வருகின்ற அரசு. இருப்பினும், இது போன்ற பொது நிகழ்ச்சிகள், மதரீதியாக அல்லது சட்டஒழுங்கை பாதிக்கக்கூடிய வகையில் அமையுமேயானால், அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்கு உண்டு.

மேலும், மதரீதியான பிரச்சனைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ள மாநகரமான கோவை மாநகரில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான தலைப்புகளுடன் நிகழ்ச்சிகளை அமைப்பதும், சட்டஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வேண்டுமென்றே பதிவு செய்யும் பங்கேற்பாளர்களைக் கொண்ட எந்த ஒரு விவாத நிகழ்ச்சியையும் நடத்தலாமா? என்ற பொறுப்புணர்வுடன் ஊடகங்களும் செயல்படவேண்டும். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கே கலந்து கொண்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.


மக்கள் கருத்து

தமிழன்Jun 13, 2018 - 12:53:46 PM | Posted IP 172.6*****

முதல்வர் அவர்களின் மிக தெளிவான பேச்சு .....புதிய தலைமுறை இனியாவது திருந்தினால் சரி....தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசும் அமீர் போன்றோரை பேச அழைக்காமல் இருப்பது நல்லது.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory