» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் கன்னியாகுமரி பக்கம் வராதது ஏன்? ராமதாஸ் கேள்வி

வியாழன் 7, டிசம்பர் 2017 3:32:17 PM (IST)

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஓகி புயலால் பாதிப்படைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி துரிதமான கதியில் நடைபெறவில்லை என்றும், மீனவர்களை மீட்பதில் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் கேரள அரசு, புயலால் பலியான மீனவர்களுக்கு 20 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால், தமிழக அரசு மிகவும் குறைவான இழப்பீடு தொகை அளிக்க முன்வந்தததால், இதுகுறித்த வழக்கில் பதிலளிக்க மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு திகழ்கிறது. ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க பினாமி தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் வி‌ஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாற்றுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை உணர முடிகிறது.

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக் கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது. இதுவரை ஒரே ஒரு மீனவரைக் கூட தமிழக அரசு மீட்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் பொய்யானவை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
 
தற்போதைய அரசுக்கு மக்களின் மீதும், மக்களின் பிரச்னைகள் மீதும் அக்கறை இல்லை. இந்தப் புகார்களை களைய ஓகி புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப்பணிகளை விரைவுபடுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதை விட ஆர்.கே நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வது தான் முக்கியமா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory