» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்ணீரில் மூழ்கடித்து வக்கீலின் குழந்தை கொடூர கொலை : சொத்துக்காக கள்ளக்காதலி வெறிச்செயல்

திங்கள் 13, நவம்பர் 2017 5:08:29 PM (IST)

வக்கீலின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு, தண்ணீரில் மூழ்கடித்து அவரது குழந்தையை கொடூரமாக கொன்ற  கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை குன்றத்தூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (எ)சரவணன் (32). இவர் வக்கீல். இவரது மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோசிகா(4) என்ற மகள் இருந்தாள். இவள் கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்தாள். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தாயுடன் கோசிகா, மூன்றாம்கட்டளையில் வசித்தார். 

குழந்தையை பார்க்க முடியாமல் தவித்துவந்த சரவணன் உறவினர்கள் மூலம் வாரத்தில் இரண்டு நாள் குழந்தை தன்னிடம் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி   வாரத்தில் வெள்ளிக் கிழமை  குழந்தை கோசிகா, தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டு திங்கள் கிழமை  தாய் ஜெயந்தி வீட்டிக்கு வந்துவிடுவாள். இதுபோல் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையை அனுப்பிவைத்துவிட்டு ஜெயந்தி, வேலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். 

நேற்று காலை ஜெயந்தி செல்போனுக்கு பேசிய சரவணன், ‘’மாடிப்படியில் இருந்து குழந்தை தவறிவிழுந்து விட்டாள். போரூரில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.இதையடுத்து ஜெயந்தி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். குழந்தையை பற்றி விசாரித்தபோது இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் ஜெயந்தி கதறி அழுதார். அப்போது குழந்தையின் முகத்தில் பெரிய காயம் இருந்ததால் குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது என்று ஜெயந்தி கூறினார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் ஜெயந்தி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் குழந்தை கோசிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். 

போரூர் உதவி ஆணையாளர் கண்ணன், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி போலீசார் தரப்பில் கூறியதாவது;அரக்கோணம் வளசவாக்கம் பகுதியை சேர்ந்த ஆஷா(28), சரவணனை சந்தித்துள்ளார். அப்போது தன் கணவர் ரமேஷ் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து  வாங்கித் தர உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.  ஆஷா அழகில் மயங்கிய சரவணன் அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைத்துள்ளார். இதன்படி தினமும் அரக்கோணத்தில் இருந்து வந்து  செல்ல சிரமமாக இருக்கும். விவாகரத்து வழக்கு முடியும் வரை என் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சம்பளம் தருகிறேன். வழக்கையும் இலவசமாக நடத்துகிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஐந்து மாதத்துக்கு முன் அரக்கோணம் வீட்டை காலிசெய்துவிட்டு குன்றத்தூரில் வக்கீல் சரவணன் வீட்டில் தங்கியுள்ளார். இவர்களுடன் மகன் மற்றும் தனது தம்பி குமார்(25) ஆகியோரும் வசித்துள்ளனர். அந்த வீட்டில் சரவணனின் அப்பா மோகன் (60) இருந்துள்ளார். சரவணன் ஆஷாவிடம், ‘’என் மனைவியும் என்னை விட்டு பிரிந்துசென்று விட்டார். தனிமையில் இருக்கும் நாம் இருவரும் புது வாழ்கையை ஆரம்பிப்போம். எனது சொத்துக்கள் அனைத்தும், உன் மூலம் பிறக்கும் நமது குழந்தைகளுக்கே தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும்  தனது மனைவியின் நகைகளையும் ஆஷாவுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில் ஆஷா கர்ப்பமானார். 

இதனிடையே சரவணனின் தந்தை மோகன் அடிக்கடி பேத்தி கோசிகாவே எங்களது  உண்மையான வாரிசு, அவருக்கே சொத்துக்கள் அனைத்தும் சொந்தம் என்று அடிக்கடி ஆஷாவிடம் கூறியதாக தெரிகிறது. குழந்தை கோசிகாவை  கொலை செய்தால்தான் சரவணனின் சொத்துக்கள் அனைத்தும் தமக்கு கிடைக்கும் என்று ஆஷா நினைத்தார். அத்துடன் குழந்தை கோசிகா அடிக்கடி சரவணன் வீட்டுக்கு வந்து சென்றதால் மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற பயமும் ஆஷாவை தொற்றிக்கொண்டது. இதற்கு ஒரே தீர்வு குழந்தை கோசிகாவை கொலை செய்வதுதான் என்று ஆஷா நினைத்து அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார். நேற்று சரவணனின் தாய்க்கு நினைவு தினம். இதனால் மோகன் தனது பேத்தியை ஆஷாவிடம் விட்டுவிட்டு தேவையான பூக்கள், பழங்கள் வாங்க கடைக்கு சென்றார். ஆஷாவின் குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது தம்பி குமாரும் வெளியே சென்றுவிட்டார். வழக்கு விஷயமாக சரவணன் சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் ஆஷாவும் குழந்தை கோசிகாவும்தான் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு ஆஷா, ஒரு பெரிய வாளியில் முழுவதும் தண்ணீர் நிரப்பியுள்ளார். பின்னர் அதில் குழந்தையின் தலையை அமுக்கி துடிதுடிக்க கொன்றுள்ளார். குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்தபிறகு உடம்பை முழுவதுமாக துடைத்து, புது ஆடை அணிவித்து விளையாடும்போது தவறி விழுந்து இறந்தாக நாடகம் ஆடியுள்ளார். இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், ஆஷாவை கைது செய்தனர். இவ்விவகாரம் ஏற்கனவே சரவணனுக்கு தெரியுமா? குழந்தையை கொலை செய்வதற்கு அவரும் உடந்தையாக இருந்துள்ளாரா? கொலையை மறைக்க உதவி செய்தாரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory