» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நகை கடையில் ரூ.4½ லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு : பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 17, டிசம்பர் 2024 8:36:31 AM (IST)
அருமனை அருகே நகைக்கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குமரி மாவட்டம், அருமனை அருகே மேல்புறம் வெங்கனாங்கோடு பகுதியில் பத்மநாபபிள்ளை என்பவர் நகை பட்டறை மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு நகை விற்பனையில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
இவர் கடந்த 14-ந் தேதி மாலையில் நகை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடையை திறக்க வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள ஷோரூமில் வைத்திருந்த 4½ கிலோ வெள்ளி கொலுசு, நகைகள் மற்றும் 4 கிராம் தங்க மோதிரங்களை காணவில்லை. மர்மஆசாமிகள் நகை கடைக்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து அவர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
திருட்டு போன தங்கம், வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4½ லட்சம் என பத்மநாபபிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் திருடிய மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர். போலீசார் முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.