» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்தியாவை தர்மயுகத்துக்கு அழைத்துச் செல்கிறார் பிரதமர் மோடி: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

வெள்ளி 13, டிசம்பர் 2024 8:36:34 AM (IST)



"பிரதமர் மோடி, இந்தியாவை தர்மயுகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்" என்று அகில திரட்டு உதய தினவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

குமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் உள்ள தாமரைகுளம்பதியில் புனித அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டம் துலங்கும்பதி, துவரையும்பதியில் இருந்து கடந்த 8-ந் தேதி தொடங்கிய ஊர்வலம் நான்கு மாவட்டங்களை கடந்து நேற்று காலை 7 மணிக்கு தாமரைகுளம் பதியை வந்தடைந்தது. 

அகிலத்திரட்டு அம்மானை புனித யாத்திரை நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் 108 பதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட திருநாமம் மற்றும் திருப்பதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைப்பதற்காக பெற்றுக் கொண்டார்.

அதன்பிறகு தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை சார்பில் தொடங்க உள்ள அய்யாவழி ஆய்வு மையத்திற்கு ஆளுநர் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஐந்து பதிகளின் குருமார்கள், அவதாரப்பதி நிர்வாகிகள், அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அன்புக்கொடி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன்பிறகு சாமிதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பில் அகிலத்திரட்டு அம்மானை உதயதினவிழா நடந்தது.

இந்த விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசுகையில் கூறியதாவது: எப்போதெல்லாம் சனாதன தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுகின்றதோ? அப்போதெல்லாம் நாராயணர் இங்கே அவதரிக்கின்றார், அவதரிப்பார் என்பது நம்முடைய புனித நூல்கள் கூறுகின்ற உறுதியான செய்தி என்பது நமக்கெல்லோருக்கும் தெரியும்.

நமது தர்மங்கள் சொல்கிறது, நாம் அனைவரும் சமம். இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமையே இல்லை. ஏனென்றால் நாம் அனைவருமே கடவுளின் பரிணாமமாக இருக்கின்றோம் என்பது தான் சனாதன தர்மத்தின் உறுதியான செய்தி. சனாதன கோட்பாட்டுக்கு வெளியே யாருமே இல்லை. நம்பாதவர்கள் கூட நம்முடன் சேர்ந்து கொள்கின்றார்கள் என்பது சனாதனத்தின் நிலை. என்னுடைய கடவுள் மட்டும் தான் கடவுள், வேறு கடவுளே இல்லை என்று சொல்கின்ற தன்மை இங்கு இல்லவே இல்லை. அடுத்தவர்களை, அடுத்த வழிபாட்டுக்காரர்களை இழிவாக பேசுகின்ற விஷயம் சனாதனத்தில் இல்லை.

எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு உலகில் வேறு எந்த நாட்டிலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு அடிப்படை காரணம் நமது சனாதன தர்மம்தான். நான் இந்த நூலை முழுவதுமாக படித்ததில்லை. ஆனால் சில பகுதிகளை படித்துள்ளேன். அய்யா சொல்கிறார், கலியுகம் அழிந்து தர்மயுகம் எழும் என்று அதில் சொல்லியிருக்கிறார். ஆம், அந்த நாள் வந்து விட்டது. கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை ஸ்தாபிக்கிற பணியில் அய்யாவின் பக்தரான பாரத பிரதமர் நரேந்திரமோடி நாட்டை தர்மயுகத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னால் தர்மத்தை பற்றியும், நாட்டைப்பற்றியும் ஆழமாக தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட தலைவர் நமது நாட்டை வழிநடத்தவில்லை. இன்றைக்கு 140 கோடி மக்களையும் ஒரே இனமாக, ஒரே மனிதர்களாக அய்யா வைகுண்டர் எப்படி சொன்னாரோ, அப்படி அய்யா வைகுண்டரின் வழியில் நமது நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மோடி. எல்லோருக்கும் சேர்த்து எல்லாமுமான வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்த நாட்டை முன்னிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் நமது பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory