» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுத்தேர்வினை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுரை
செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:32:56 PM (IST)
பொதுத்தேர்வினை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என 10 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுரை கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (10.12.2024) நேரில் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடி தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உள்ளது. குறிப்பாக தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் உயர்கல்வி படிப்பதற்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி பயிலும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால குறிக்கோள்கள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைவான காலமே இருப்பதால், தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு படிக்க வேண்டும். பொதுத்தேர்வு மீதான அச்சம், கலக்கமும் இருக்கும். நீங்கள் அனைவரும் பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயாராகி வருகிறீர்கள். பொதுத்தேர்வு என்பது உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காலகட்டம் என்பதால் மிகுந்த அக்கறையுடன் படிக்க வேண்டும்.
மேலும் நம் பள்ளிக்கும் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தர மாணவ மாணவியர்கள் கேட்டுக்கொள்கிறேன். எனவே மாணவ மாணவியர்களாகிய நீங்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.