» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரச்சனைகளை குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் : ஆட்சியர் பேச்சு
வியாழன் 10, அக்டோபர் 2024 4:26:58 PM (IST)
மன அழுத்தத்தை தவிர்க்க உங்களுடைய பிரச்சனைகளை குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உலக மனநல தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட மன நல திட்டம், அரசு ஆயூர்வேதா மருத்துவமனை இணைந்து நடத்திய உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று (10.10.2024) கலந்து கொண்டு, உலக மனநல தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில்- அவசர கதியில் இயங்கி கொண்டு இருக்கிற இன்றைய சூழலில் பல்வேறு நோய் தாக்கங்கள் இருந்தாலும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள், வாய்ப்புகள், தேவைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தனிமை, இயலாமை, போதைப்பொருளின் தாக்கம், புறக்கணிப்பு, உடைந்த குடும்ப சூழல்களாலும் பணியாற்றும் இடங்களில் ஏற்படும் நெருக்கடியாலும் மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பாதிப்பிற்கு உள்ளாகாமல் உரிய ஆலோசனை மற்றும் மனநலம் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மனநலம் பாதிப்பு விழிப்புணர்வில்லாதவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை புரிந்துக்கொள்ளாமல் பெறும் சிகிச்சையை தேவையற்றது என்றும், நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், தேவையின்றி மாத்திரை மருந்து கொடுப்பதாக தவறான தகவல்களை பிறரிடம் பரிமாறிக் கொள்வதால் சம்பந்தபட்ட மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதும், முறையான சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்து வருவதும் வருத்தப்பட வேண்டிய நிலையாகும்.
இந்நிலையினை மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசானது மனநல ஆலோசனைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதை போல மனநலம் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்களை ஆற்றுப்படுவதற்கு தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மாதம் ஒருமுறை மனநலம் குறித்த ஆலோசனை வழங்க சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு முகாம் நடத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது. மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியாக மனநல சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் சென்று மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகள் பெற்று அதற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, தங்களது மனஅழுத்தங்களை தவிர்க்க ஒவ்வொருவரும் உங்களுடைய பிரச்சனைகளை குடும்ப உறுப்பினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
இந்த விழிப்புணர்வு பேரணி அரசு ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ரோஜாவனம் பாரா மெடிக்கல் மாணவர்கள் சுமார் 70 பேர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முதல் டெரிக் சந்திப்பு வரை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கு.ம.பாரதி, அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாறன்ஸ் பேபி, கண்காணிப்பு பொறியாளர் (பேரூராட்சிகள்) முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக மேலாளர் (பொது) சுப்பிரமணியம், துணை இயக்குநர் (குடும்ப நலம்) ரவிக்குமார், மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஈனோக், இளநிலை மறுவாழ்வு அலுவலர் பவித்ரா, முடநீக்கு வல்லுநர் மரிய ஜெகன், மாவட்ட திட்ட அலுவலர் ராம் சிவா, ரோட்டரி கிளப் கிரேட்டர் நாகர்கோவில் தலைவர் பிராங்கிளின், கலைமாமணி அ.பழனியாபிள்ளை, கிராமிய பாடகர் கண்டன்விளை இராஜேந்திரன், அலுவலக பணியாளர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.