» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நவராத்திரி விழாவுக்கு யானையை வரவழைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:42:18 AM (IST)

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்கு யானை பயன்படுத்தாததை கண்டித்து 48 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, நவராத்திரி விழா என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் நவராத்திரி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த திருவிழா காலங்களில் விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றில் இருந்து புனித நீரை யானையின்மீது எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானைமீது பயன்படுத்துவது வழக்கம். கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கப்படவில்லை. அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 3-ந் தேதி முதல் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆண்டும் விழாவுக்கு யானை வரவழைக்கப்படவில்லை.

எனவே இந்து அறநிலையத்துறையை கண்டித்து 48 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட போவதாக போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அதன்படி நேற்று கன்னியாகுமரி பஸ் நிலைய ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட செல்லும் பக்தர்கள் தங்குதடையின்றி செல்ல அங்கு புதிதாக அமைத்திருக்கும் கேட்டை அகற்றவும், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களை ஆகம விதிகளுக்கு புறம்பாக மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுவதை கண்டித்தும், பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் மதில் சுவர் கட்டி முறையாக பராமரிப்பு செய்யவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 48 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory