» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மழை நீரை சேகரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 31, ஜூலை 2024 12:56:16 PM (IST)
மழை நீரினை சேகரித்து நிலத்தடி நீரினை அதிகரித்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (31.07.2024) செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதி நவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக திரையிட்டு பிரச்சாரத்தினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையின் போது பெய்து வரும் மழைநீரினை நிலத்தடியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர் கட்டமைப்பை உருவாக்கி மழை நீரினை சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்கள்.
அதனடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த குறும்படம், மற்றும் குறும் பாடல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதி நவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக திரையிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு இன்று விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிடங்களின் மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் வடிகட்டும் குழிக்குள் செலுத்தி பின்னர் குழாய்க்கிணற்றில் விட்டு மழைநீரை சேகரிக்க முன்வர வேண்டும். அதிகப்படியாக தொட்டியில் நிரம்பி விழும் மழைநீரைக் கசிவுநீர்க்குழி அமைத்து அதில் விட வேண்டும். உபயோகத்தில் இல்லாத குழாய்க் கிணற்றையும் பயன்படுத்தி, இம்முறையின் மூலம் மழைநீரை பூமிக்குள் செலுத்தலாம். குழாய் கிணற்றில் மழைநீர் ஊடுருவும் அளவு மற்றும் வேகம் திறந்தவெளிக் கிணற்றைவிட குறைவாக இருக்கும்.
மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மற்றும் வடிகட்டும் குழிக்குள் செலுத்தி பிறகு திறந்தவெளிக் கிணறு அல்லது தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் விட வேண்டும். வடிகட்டி தொட்டி அமைத்து உடைந்த கருங்கல் அல்லது கூழாங்கற்களை சுமார் 1அடி உயர அளவில் அடிப்பகுதியில் போட்டு, அதன்மீது ஆற்று மணலை நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால் சிமெண்ட் பலகையால் மூடி மழைநீரை சேகரிக்க வேண்டும்.
மேலும் வணிக வளாகங்களிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழை நீர் கட்டமைப்பினை ஏற்படுத்தி மழை காலங்களில் பொழியும் மழை நீரினை சேமிக்க வேண்டும். மழை நீரினை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து நிலம் வறட்சி அடையாமல் பசுமையாகி குடிதண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இதன் மூலம் மாவட்டத்தில் விவசாயம் செழிப்படையும். வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் பொக்கிஷம் ஆகும். எனவே பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா. தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியதோடு, நீர்தர பரிசோதனை செயல்முறை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர்கள் கோபால கிருஷ்ணன், திருநாவுகரசு, உதவி நிர்வாகப்பொறியாளர்கள் ஹரி கோவிந்த், ராஜன், பிரேம்நாத், பாக்கியராஜ், ஆனந்தி, உதவி நில நீர் வல்லுநர் மரு.ஜாஸ்மின் ஷீபா, உதவி பொறியாளர்கள் முருகன், ஆஷிக் அகமது, ராஜேஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.