» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் - திரை விமர்சனம்
திங்கள் 29, ஜூலை 2024 5:36:12 PM (IST)
தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் அவரது 50ஆவது படமாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ராயன். தனது 50ஆவது படத்திற்கு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுத்து ரசிகர்களை ஹைப் ஏற்றினார் தனுஷ். ஏற்றிய ஹைப்பிற்கு திருப்தி படுத்தினாரா?
சுருக்கமாக சொல்லவேண்டுமெனறால்: ஏறிய ஹைப்பிற்கு அருகில் செல்ல முயற்சி செய்திருக்கிறார் தனுஷ். இடைவேளை காட்சிகள் மிரட்டலாக படமாக்கப்பட்டுள்ளது. ”எனக்கு ஏன் ’பெரிய பாய்’ எனப் பெயர் வைத்தார்கள் தெரியுமா?” என பிளாஷ் பேக் சொல்லி மிரட்டுவதுபோலத் தரமான இசையைத் தந்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமான். மற்றபடி கதையில் புதிதாக எதுவும் இல்லை.
சிறுவயதில் சொந்தவூரில் பெற்றோரைத் தொலைத்த ராயன் தனது இரண்டு தம்பிகள் மற்றும் கைக் குழந்தையாக இருக்கும் தங்கையுடன் பிழைப்பிற்காக சென்னைக்கு வருகிறார். அங்கு சேகர் (செல்வராகவன்), ராயனுக்கு வேலை கொடுத்து உதவுகிறார். ராயன் தன் தங்கை, தம்பிகளுக்காக கஷ்ட்டப்பட்டு உழைக்கிறார். இதற்கிடையில் ராயன் வசிக்கும் அதே பகுதியில் உள்ள இரண்டு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட போலீஸ் திட்டம் தீட்டுகிறது. இந்த திட்டத்தில் ராயனின் குடும்பம் எப்படி சிக்குகிறது, தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா இல்லையா என்பதே ஸ்பாய்லர் இல்லாத கதைச் சுருக்கம் எனலாம்.
தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ் அழகாக பொருந்துகின்றனர். தங்கையாக துஷாரா விஜயன் அவர்களுக்கும்மேல் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். இவர்களுக்கு அண்ணனாக ‘ஸ்டைல்’ என மொட்டையுடன் தோன்றும் தனுஷ் ராயனாக மனதில் நிற்கிறார்.
கடைக்குட்டி தம்பியின் கல்லூரி வாழ்க்கை, நடு அண்ணனின் காதல் வாழ்க்கை, தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ராயன் படும் பாடு என சலிப்பை ஏற்படுத்தாமல் முதல்பாதி முடிந்தாலும், இரண்டாம் பாதி முழுதும் சண்டை, ரத்தம், மியூசிக்கோடு தனுஷ் நடப்பது மட்டும் அதிகம் காட்டப்பட்டு சலிப்பு தட்டுப்படுகிறது. அந்த காட்சிகளும் பெரிய பாயின் இசையால் கொஞ்சம் காப்பாற்றப்படுகின்றன. எங்கோ ஆரம்பித்த கதை எங்கோ முடிவதுபோல கதைக்கென ஆழமான நோக்கு இல்லாமல் இருப்பது படம் போதுமான தெம்பில்லாமல் நகர ஒரு காரணமாக இருக்கலாம்.
மிகப்பெரிய ரவுடியை எப்படி அசால்ட்டாக கொல்ல முடியும்? அவ்வளவு பேரை கொன்ற இவனால் இவனைக் கொல்ல முடியாதா? போன்ற சந்தேகங்கள் எழும்போதெல்லாம் ஏ.ஆர். ரகுமான் நம்மை திசைதிருப்ப முயன்று தனுஷைக் காப்பாற்றுகிறார்.
சேகர் அண்ணனாக வரும் செல்வராகவன், தன் ஸ்டைலில் வசனங்கள் பேசி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வழக்கமான நகைச்சுவையான நடிப்பில் ரசிக்க வைக்கிறார். போலீசாக வரும் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாப்பாத்திரமென்றாலும் அனைவரையும்விட குறைவான நேரமே திரையில் தோன்றுகிறார். அபர்னா பாலமுரளி அந்த இடத்திலேயே பிறந்து வளர்ந்ததுபோல் தோற்றத்திலும், நடிப்பிலும் நறுக்கென பொருந்தியிருக்கிறார்.
இசைக்கு அடுத்ததாக ஒளிப்பதிவு! கதை நடக்கும் இடத்தையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்திலும் உணர்ச்சிகளைக் கடத்துவதில் அவரின் பங்கும் பெரிது. எழுத்தாளராக தனுஷ் ஓகேவான கதையைக் கொடுத்திருந்தாலும் இயக்குநராக அவரது உழைப்பு திரையில் தெரிகிறது. நடிகராகவும் பிண்ணியிருக்கிறார்.
இண்டர்வெல் காட்சியை நோக்கி எழுதப்பட்ட முதல் பாதி நம்மை ஓரளவுக்கு ஆறுதல் படுத்தியது என்றாலும், மீதக் கதையை முடிக்க சிரமப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. கடைசியில் வரும் பாடல் காட்சிகளில் ரசிகர்கள் பெருமூச்சுவிடும்போது, மீண்டும் ஏ.ஆர் .ரகுமான் மூச்சைப் பிடித்து ‘உசுரே நீதானே’ எனப் பாடும்போது எல்லாம் மறந்துபோகிறது.
கதையின் களம் கச்சிதமாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை, தனுஷின் 50ஆவது படம் எனச் சொல்லவோ, அதை அவரே இயக்கி நடித்தார் எனச் சொல்லி பெருமிதப்படும் அளவுக்கோ இல்லை என்றே சொல்லவேண்டும்.