» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கல்வித்துறையில் கன்னியாகுமரி மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது : ஆட்சியர் பெருமிதம்!
திங்கள் 29, ஜூலை 2024 4:10:17 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் கல்வித்துறையில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் இன்று (29.07.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் திட்டமானது 2011 ஆம் ஆண்டு முதல் சமூகநலத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு, பள்ளி மாணவ மாணவியருக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்
.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 56,462 குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக இன்று மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30 க்குள் (30.09.2024) இரண்டாம் கட்டமாக இணை சீருடைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3வது மற்றும் 4வது இணை சீருடைகள் தேவைப்பட்டியல் கிடைக்கப் பெற்ற பின்னர் நவம்பர் 2024 க்குள் வழங்கி முடிக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நோக்கம் அனைவரும் சமம் என்ற எண்ணத்தினை மாணவ மாணவியர்களிடையே ஏற்படுத்துவதேயாகும். அதனை கருத்தில் கொண்டு நமது மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், விலையில்லா பள்ளி பாடப் புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித் தொகை, மதிய உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக படித்து, உங்களுக்கான கனவை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வித்துறையில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நன்றாக கல்வி கற்று, உயர்கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்..
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, மாவட்ட மெட்ரிக்கல்வி அலுவலர் (பொ) முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (மார்த்தாண்டம்) மாரிமுத்து, மாவட்ட தொழிற்கூட்டுறவு அலுவலர் ஜெ.ஜெய ஞான பிரின்ஸ், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாண்சன், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ அப்படியாJul 29, 2024 - 04:29:04 PM | Posted IP 162.1*****