» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்
திங்கள் 29, ஜூலை 2024 12:03:36 PM (IST)
திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவரை ரவுடி உள்பட 6 பேர் கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்தவர் ஜாக்சன் (38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர். இவருடைய மனைவி உஷாகுமாரி (36) திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு அஸ்ரின் ஜெனிலியா (14), அஸ்லின் ஜெஸ்லியா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். அஸ்ரின் ஜெனிலியா 9-ம் வகுப்பும், அஸ்லின் ஜெஸ்லியா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஜாக்சன் வீட்டில் இருந்து பழங்கள் வாங்க கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். செல்லும் வழியில் வீட்டின் அருகில் உள்ள அந்தோணியார் ஆலய குருசடிக்கு சென்று அவர் ஜெபம் செய்தார்.இதற்கிடையே உஷாகுமாரி வீட்டு சமையலுக்கு எண்ணெய் இல்லை என்பதை அறிந்ததும் கணவரிடம் தெரிவிக்க குருசடியை நோக்கி நடந்தார்.
அந்த நேரம் ஜெபத்தை முடித்த ஜாக்சன் ஆலயத்தை விட்டு வெளியே வர, 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் அவரை நோக்கி நெருங்கியது. கும்பலில் ஒருவர் வெள்ளாங்கோடு புன்னமூட்டுவிளையை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் (32). அவர் ஜாக்சனை பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு இன்றோடு தொலைந்து போ என்றவாறு திடீரென வெட்டுக் கத்தியால் வெட்டினார். இந்த வெட்டு ஜாக்சனின் கழுத்தை பதம் பார்த்தது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் வெட்டுகாயத்தால் நிலைகுலைந்து அங்கேயே கீழே சரிந்தார். அந்த சமயத்தில் ராஜகுமாருடன் வந்த கும்பல் ஜாக்சனின் தலையை குறி வைத்து சரமாரியாக வெட்டினர். மேலும் கம்பியாலும் உடலில் பலமாக தாக்கினர். கண்முன்னே கணவருக்கு நடந்த கொடூர சம்பவத்தை பார்த்து உஷாகுமாரி துடிதுடித்து போனார். காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்... என ஓடியபடி வந்தார். உடனே அந்த கும்பலின் பார்வை உஷாகுமாரியை நோக்கி திரும்பியது. வெட்டு கத்தியால் அவரை மிரட்டியபடி துரத்த முயன்றனர்.
உடனே அவர் அபய குரல் தொடர்ந்து எழுப்ப, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இனி இங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது. கண்ணிமைக்கும் நேரத்தில் கும்பல் நடத்திய வெறியாட்டத்தால் ரத்த வெள்ளத்தில் ஜாக்சன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
இதனை தொடர்ந்து உஷாகுமாரி பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியதால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜாக்சன் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கொலை பற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கொலை நடந்த குருசடி முன்பு விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜாக்சனுக்கும், ராஜகுமார் என்ற விலாங்கனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் இருவரும் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 2 பேர் மீதும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த முன்விரோதம் தான் மேலும், மேலும் இருவருக்கும் இடையே பகைமையை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஜாக்சனை தீர்த்து கட்டும் அளவுக்கு ராஜகுமார் சென்று தனது திட்டத்தையும் நிறைவேற்றியது அம்பலமானது.
அதே சமயத்தில் ராஜகுமாருடன் வந்த 5 பேர் யாரென்று தெரியவில்லை. ராஜகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக உஷாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவரை, கும்பலுடன் வந்த ரவுடி சுற்றி வளைத்து கொடூரமாக தீர்த்துக்கட்டிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.