» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.8.60 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சனி 27, ஜூலை 2024 4:29:41 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8.60 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ளமோடி தேர்வுநிலை ஊராட்சி, மயிலாடி பேரூராட்சி, பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (27.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சாலை உட்கட்டமைப்பு வசதிகள், நகர்புற மேம்பாட்டு திட்டங்கள், முதல்வரின் கிராம சாலைகள், விரிவான சாலை உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாலை வசதிகளை கடைகோடி மக்களின் அன்றாட பணிகளுக்கு பாதுகாப்பாக அமைந்திட ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து ஆணைபிறப்பித்துள்ளார்கள். அதன்ஒருபகுதியாக மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடி கூண்டுபாலம் முதல் அஞ்சுகிராமம் வரை விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் (2021-2022) கீழ் ரூ.2 கோடி மதிப்பில் மருந்துவாழ்மலை கூண்டு பாலத்தினை சீரமைத்து, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் (2021-2022) கீழ் ரூ.1.60 கோடி மதிப்பில் வெள்ளிச்சந்தை முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமோடி முதல் பேயோடு (சாந்தபுரம் சாலை) வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தார்சாலையின் அளவு சரியானதாகவும், தரமானதாகவும் போடப்பட்டுள்ளதா என அளவீடு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, தார்சாலையின் அளவு குறித்து பொறியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.
பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் (2021-2022) கீழ் ரூ.5 கோடி மதிப்பில் பொட்டல் – புத்தன்துறை – பள்ளம் துறை வரை 500 மீட்டர் நீளத்திற்கு கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிடப்பட்டது. மேலும் அதற்கான மூலப்பொருட்கள் இருப்பினையும், அதன் தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, தரமான பொருட்களை கொள்முதல் செய்து, கட்டுமான பணிகளை உறுதிதன்மையோடு அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கேசவன்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட சங்குத்துறை கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாடம் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வரும்போது அவர்களுக்கான பாதுகாப்பு வளையங்கள் அமைத்து விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகைகள் அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வுகளில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர்கள் விஜயா, ரெஜ்வின் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.