» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!
வெள்ளி 12, ஜூலை 2024 3:11:55 PM (IST)
குமரி மாவட்டத்தில் 5182 மாணவ மாணவியர்களுக்கு வரும் ஜூலை 15ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட சரல் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி, உன்னங்குளம் வெஸ்லி நடுநிலைப்பள்ளி மற்றும் முக்கலம்பாடு ஆர்.சி. தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதை இன்று (12.07.2024) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி செல்லும் சிறார்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்த தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி, கடந்த 15.09.2022 அன்று மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலை பகுதிகளில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக துவக்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1ம்வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 09.01.2024 அன்று அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 2 பள்ளிகளில் 187 மாணவ மாணவியர்களும், தோவாளை வட்டத்தில் 3 பள்ளிகளில் 250 மாணவ மாணவியர்களும், இராஜாக்கமங்கலம் வட்டத்தில் 10 பள்ளிகளில் 427 மாணவ மாணவியர்களும், குருந்தன்கோடு வட்டத்தில் 8 பள்ளிகளில் 475 மாணவ மாணவியர்களும், தக்கலை வட்டத்தில் 6 பள்ளிகளில் 289 மாணவ மாணவியர்களும், திருவட்டார் வட்டத்தில் 6 பள்ளிகளில் 358 மாணவ மாணவியர்களும், கிள்ளியூர் வட்டத்தில் 10 பள்ளிகளில் 1296 மாணவ மாணவியர்களும், மேல்புறம் வட்டத்தில் 8 பள்ளிகளில் 760 மாணவ மாணவியர்களும், முஞ்சிறை வட்டத்தில் 16 பள்ளிகளில் 1140 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 69 அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் 5182 மாணவ மாணவியர்களுக்கு வரும் ஜூலை 15ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, உன்னங்குளம் வெஸ்லி நடுநிலைப்பள்ளி மற்றும் முக்கலம்பாடு ஆர்.சி. தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு அமைக்கப்பட்டுள்ள சமையலறை, உட்பொருட்கள் இருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள சமையறையினை பார்வையிட்டதோடு, சில அடிப்படை வசதிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும் ஆய்வு மேற்காண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.
ஆய்வுகளில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீ ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கலாவதி, உதவி திட்டஇயக்குநர் (மகளிர் திட்டம்) வளர்மதி, பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.