» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நர்ஸ் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!

வியாழன் 28, செப்டம்பர் 2023 12:25:45 PM (IST)

குளச்சல் அருகே நர்ஸ் வீட்டில் 16 பவுன் நகைகள் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பிள்ளவிளையை சேர்ந்தவர் காட்சன் (41). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீசுதா (39) சென்னை திருவல்லிக்கேணி யில் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் பிள்ளவிளையில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. ஆலங்கோட்டில் உள்ள காட்சனின் மைத்துனர் சேகர், அடிக்கடி வீட்டுக்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி செல்வது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மாடியில் உள்ள 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.அதில் இருந்த சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

கொள்ளையர்களை பிடிக்க குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று செம்பொன்விளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 

இதில் அவர் ஸ்ரீசுதா வீட்டில் புகுந்து கொள்ளையடித்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சிவா (29) என்பதும் குளச்சல் வெள்ளியாகுளம் பனவிளையை சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் மேற்கு கல்லுக்கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் பால்மணி (46)வீட்டின் ஓடு பிரித்து திருடிய செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory