» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் பணிக்கான தேவபிரசன்னம்..!!

திங்கள் 18, செப்டம்பர் 2023 11:41:48 AM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடையானது தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும். 

பின்னர், மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.  இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் பரசுராமரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர் மத்தியில் பெரும் குறையாவே இருந்தது. இதையடுத்து ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி அஸ்திவாரத்தோடு நின்று போனது.

அந்த பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஸ்தபதி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அஸ்திவரத்தோடு நின்றுபோன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கலாமா? என்பது குறித்து தேவ பிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதாவது:-

கன்னியாகுமரி சன்னதி தெருவில் இருக்கும் சக்தி பீடத்தில் ஒரு கிணறு உள்ளது. அதை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சக்தி பீடத்தை புனரமைத்து பூஜைகள் நடத்த வேண்டும். சாஸ்தா, விநாயகர் விக்ரகங்கள் நிர்ணயித்த இடத்தைவிட மாற்று இடத்தில் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். கோவிலில் நாகர் பீடம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

சன்னதி தெருவில் உள்ள பாபநாசம் தீர்த்த குளத்தை சீரமைத்து அதில் பூசாரிகள் குளித்து அதன்பிறகே பகவதி அம்மன் கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. 

அதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து கடைபிடிக்க வேண்டும் என தேவபிரசன்னத்தில் கூறப்பட்டுள்ளது. இவை நடைமுறைக்கு வந்த பிறகு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்படும் என கூறப்படுகிறது. தேவ பிரசன்னம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் செய்து இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory