» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேசிய பெண் குழந்தைகள் தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!

செவ்வாய் 24, ஜனவரி 2023 4:02:52 PM (IST)



தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் தேதிய பெண்குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் இன்று (24.01.2023) எடுத்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவிக்கையில்:- தேசிய பெண்குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் நம் சமூகத்தில் தினசரி அடிப்படையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை எடுத்துரைப்பது ஆகும். பெண்குழந்தைகள் தினமான இன்றையதினம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 தேதி அன்று நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், சிறுமிகள் சிறு வயதிலிருந்தே வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், மேலும் கல்வியைத் தொடர வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நாளின் மூலம், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் சமத்துவம் மற்றும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் அணுகுமுறையை மாற்றுவது, பெண் சிசுக்கொலைகளை குறைப்பது மற்றும் பாலின விகிதம் குறைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் முக்கிய கவனம் தேசிய பெண் குழந்தைகள் தினமாகிய இன்று நாம் மேற்கொள்ள வேண்டும். தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நமது இந்திய அரசால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டமாகிய உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் அரசானது பெண்களை மேம்படுத்துவதில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்குழந்தைகளை பாதுகாக்க அரசால் 1971 மருத்துவ கருக்கலைப்புச் சட்டம், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2009 பெண் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2006 குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் பெண்கல்வி மிகவும் சிறப்பான முறையில் உயர்வடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) தே.திருப்பதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory