» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்க முயற்சி: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

புதன் 30, நவம்பர் 2022 12:33:39 PM (IST)



நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள பரசேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (49). இவர் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்துக் கழக பணிமனையில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜீப் டிரைவராக உள்ளார். கடந்த ஒரு மாதமாக இவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தனக்கு பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் அஜித் குமார் இன்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். இதனை கவ னித்த ஆட்சியர் அலுவ லக பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அஜித்குமார் கூறுகையில், "நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜீப் டிரைவர் பணி ஒதுக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக எனக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். போராட்டம் நடத்திய பிறகும் என்னை கண்டுகொள்ளவில்லை. எனவே எனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும்" என்றார். இதனையடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் அஜித் குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory