» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி: களியக்காவிளை அருகே பயங்கரம்!

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:43:46 PM (IST)

களியக்காவிளை அருகே கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே செங்கல் உதயன்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அப்பகுதியில் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லூர்து மேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செல்லப்பன் மனைவி குழந்தைகளுடன் உதயன்குளங்கரை பகுதியில் வசித்து வந்தார். செல்லப்பனுக்கு கருப்பட்டி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செல்லப்பன் பலரிடம் இருந்தும் பணம் கடன் வாங்கி வியாபாரத்தை செய்து வந்தார். இருந்தும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்லப்பன் மீது கடும் கோபத்தில் இருந்த லூர்து மேரி கணவர் தூங்கிய நேரத்தில் விறகு வெட்டுவதற்கு வைத்திருந்த கோடாரியால் செல்லப்பன் தலையில் வெட்டியுள்ளார். இதில் செல்லப்பன் படுகாயமடைந்தார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு குழந்தைகள் அறைக்கு ஓடி வந்தனர். தாய் கோடாரியுடனும் தந்தை உயிருக்கு போராடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர். அவர்கள் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் செல்லப்பன் பரிதாபமாக இறந்தார். மேலும் செல்லப்பன் மனைவி லூர்துமேரியை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

முதல் கட்ட விசாரணையில் லூர்துமேரி 5 வருடங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், கணவரையும் கொன்று தானும் சாகவேண்டும் என்று இந்த காரியத்தை செய்ததாகவும், ஆனால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததால் தன்னால் தற்கொலை செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் போலீசார் லூர்துமேரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவரை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory